ரயில்வேயை நவீனமயமாக்குவது என்ற முகாந்திரத்தில் நீளம் குறைந்த சாதாரண பெட்டிகளை அகற்றிவிட்டு, அதனிடத்தில் நீளம் அதிகமான, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளின் எண்ணிக்கை அதிகம்கொண்ட, ஜெர்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்படுகின்றன. அதேசமயத்தில், ரயிலின் மொத்த நீளம் அதிகமாகவதைத் தவிர்ப்பதற்காக, மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் ஒதுக்கப்படும் தனிப் பெட்டிகளை அகற்றுவது, பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்றவாறு சாதாரண பயணிகளின் உரிமைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் மூலம் முன்பதிவு செய்ய இயலாத ஏழைகள் அல்லது திடீர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் விலங்குகளைப் போல மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கமும்அதற்கும் கீழாக உள்ள ஏழைகளும் மட்டுமே இன்னமும் தமது பயணத்திற்கு அரசு பேருந்துகளையும் ரயில்களையும் நம்பியுள்ளனர். குறிப்பாக, வேலை தேடி, வாழ்வாதாரம் தேடி இலட்சக்கணக்கான ஏழைகள் இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள நகரங்களை நோக்கி விசிறியடிக்கப்படும் நிலையில், அந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவசரத் தேவைகளுக்கோ, வருடத்துக்கு ஒரிரு முறையோ தமது சொந்த கிராமத்துக்குச் சென்று திரும்புவதற்கு எளிமையான, போக்குவரத்துச் சாதனமாக ரயில்தான் இருந்து வருகிறது. நகரமயமாக்கம் தீவிரமடைய, தீவிரமடைய, அதற்கு நேர் விகிதத்தில் பயணிகள் கூட்டமும் அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையில் பொதுப் பெட்டியைக் குறைத்துக் கொண்டே போவது ஏழைகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிரான போர் என்றுதான் சொல்ல முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



