குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தலைநகரம் பரபரப்படைந்துள்ளது. 08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், தூய்மை பணியாளர் எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் வசித்த பகுதியில் உள்ள 125 குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவரின் தாயார், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு முத்திரை வைக்கப்பட்டு, குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர் வசித்த வீடருகே இருந்த 30 குடும்பத்தினரும் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவை அரசே வழங்கி வந்தது. இந்நிலையில், மேலும் 95 குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத்தில் உள்ள ஊழியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேரறிமுக ஹிந்தி பாடகியான கனிகா கபூருக்கு, கடந்த மாதம் 20ல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கபூருடன் விருந்து நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதால், தன்னைதானே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங் அன்றைய நாளே அறிவித்திருந்தார். முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மார்ச் 18ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் துஷ்யந்த் சிங்கும் பங்கேற்றிருந்தார். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர், தன்னைதானே தனிமைப்படுத்தி கொள்ளவதாக அறிவித்ததையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



