தடையை மீறி இன்று சென்னை கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் 15 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த கிழமை சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய கூட்டமைப்பினர் இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றறுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர். இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வாராகி என்பவர் மனுபதிகை செய்தார். இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். சென்னையில் நேற்று இரவு இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் அவசர கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பிறகு கூட்டாக அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.
07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தடையை மீறி இன்று சென்னை கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் அறவழியில், வரம்பு மீறாத வகையில் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



