பிற மொழி கற்க வேண்டுமெனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித்சா விளக்கம். இதனால் நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது. ஹிந்தி மொழி நாளையொட்டி இந்திய உள்துறை அமைச்சரும், பாஜக இந்தியத் தலைவருமான அமித்சா செய்தி வெளியிட்டு இருந்தார். அதில், ஹிந்தி நாட்டின் தேசிய மொழியாக இருக்க வேண்டும். ஹிந்தியால் தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும். ஹிந்தியை வைத்துதான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளம் காண முடியும் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்திலும், கர்நாடகத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். எதிர்ப்பின் வெப்பத்தால், இணையம் தீயானது. வெள்ளியன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தவிருப்பதாக திமுக அறிவித்தது. இந்நிலையில், ஹிந்தி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்சா இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார். நான் எப்போதும் சொல்வது போல இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும். தனது தாய்மொழியில் படிக்கும் போதுதான் ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும். தாய்மொழியை தாண்டி வேறு மொழியை படிப்பதாக இருந்தால் அது ஹிந்தியாக இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார். அமித்சாவின் விளக்கம் மற்றும் தமிழக ஆளுநரின் உறுதிமொழி ஆகிய காரணங்களால், ஹிந்தி மொழி பற்றிய அமித்சா கருத்துக்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் ஹிந்தித் திணிப்பை திமுக ஒருபோதும் ஏற்காது. எப்போதும் எதிர்த்து நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,279.
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறினேன் என சர்ச்சைக்கு உள்துறை அமைச்சர் அமித்சா விளக்கம் அளித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



