Show all

திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்தது! குடியுரிமை திருத்த சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம்

குடியுரிமை சட்ட முன்வரைவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுராவில் 2 ராணுவ படைகளும் அசாமில் ஒரு ராணுவ படையும் குவிக்கப்படுகிறது. இதற்காக அங்கு ராணுவம் விரைந்து உள்ளது.

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த சட்டமுன்வரைவு மக்களவையில் முந்தாநாள் நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில், இந்த சட்டமுன்வரைவை உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்தார். 

இவ்வகையாக- இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறபோது, தங்கள் நலன் பாதிக்கப்படும் என அந்த மாநில மக்கள் எதிர்க்கின்றனர். 

குடியுரிமை சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் நேற்று 11 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. குறிப்பாக  திரிபுராவில் உள்ள மனுகாட் பகுதியில் திறந்திருந்த கடைகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

வன்முறை காரணமாக  திரிபுராவில் இணையதள சேவை, மற்றும் செல்பேசி சேதிச்சேவை ஆகியவை 48 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளன. 

குடியுரிமை சட்டமுன்வரைவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. திஸ்பூரில் உள்ள ஜந்தா பவன் அருகே, போராட்டக்காரர்களால் பேருந்து எரிக்கப்பட்டது.

அசாம் மாநிலத்தில் லக்கிம்பூர், டின்சுகியா, தேமாஜி, திப்ருகார், சராய்டியோ, சிவசாகர், ஜோர்ஹாட், கோலாகாட், கம்ரூப் (மெட்ரோ) மற்றும் கம்ரூப் 10 மாவட்டங்களில் நாளை காலை 7 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.  திப்ருஹாரில் பொது அமைதியை காக்கும் வகையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அசாமின் செல்பேசி இணையச்சேவை இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரை 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட முன்வரைவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுராவில் 2 ராணுவ படைகளும் அசாமில் ஒரு ராணுவ படையும் குவிக்கப்படுகிறது. இதற்காக அங்கு ராணுவம் விரைந்து உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,363.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.