Show all

பாஜக கட்டுப்படுத்த வேண்டும்! கட்சியின் ஹிந்துத்துவா கொள்கையை வெறிதனமாக முன்னெடுப்பவர்களை- பலியாவது மனிதநேயம்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காவல்துறையினரின் முன்னிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள காணொளி சமூகவலைதளங்களில் தீயாகி வருகிறது.

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக அரசு முன்னெடுக்கும் எந்தத் திட்டமும், ஹிந்துத்துவா, ஹிந்தி, கார்ப்பரேட்டுகள் நலன் என்பதாக இருக்கிறது. உண்மையில் ஹிந்தி, ஹிந்துத்துவா கூட கார்ப்பரேட்டுகள் நலன் சார்ந்ததே என்று பேசப்பட்டு வருகிறது. 

தமிழகம் பல்லாயிரம் ஆண்டுகளாக கடுமையாக பாதித்திருக்கும் பார்ப்பனிய ஆதிக்கவாதத்தைதான், பாஜக தன் தீவிரக் கொள்கையாக முன்னெடுக்கிறது என்பதை தமிழகம் தெளிவாக உணர்ந்திருப்பதால், பாஜகவிற்கும் பாஜக ஆதரவுத் தளங்களுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை தமிழகம்.

மாறாக வடஇந்தியப்பகுதியினர் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, முகமதிய மன்னர்களால் மிதிபட்டதை நினைவில் கொண்டு, எதிர்நிலை பாஜகவின் மீது ஆர்வமிக்க அன்பு கொண்டுள்ளனர். சிலர் வெறித்தனமாக முகமதியர்களுக்கு எதிரான வன்முறையை தன்னிச்சையாக முன்னெடுத்து வருகின்றனர். இதை வடஇந்தியப் பகுதியினர் மனதளவில் கொண்டாடுகின்றனர். ஆனால் பாஜக இதைக் கொண்டாடிவிடக் கூடாது. இது போன்ற வன்முறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்;றால் பாஜக மதசார்ப்பற்ற இந்திய அரசியலமைப்பில் ஆட்சியில் இருக்கிறது. வெறிக்கு பலியாவது மனிதநேயம்!

நடுவண் பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் வரை பேரணியாக சென்றனர். 

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காவல்துறையினரின் முன்னிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள காணொளி சமூகவலைதளங்களில் தீயாகி வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் ராம் பகத் கோபால் ஷர்மா என்று தெரியவந்துள்ளது. 19 அகவை இளைஞரான இவர் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

ராம் பகத் கோபால் சர்மா, தனது முகநூல் பக்கத்தில், ‘ஒரு வேளை நான் இறந்து விட்டால், என் மீது காவிக்கொடி போர்த்தப்பட வேண்டும். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பப்பட வேண்டும்’ என்று எழுதியுள்ளார். 

இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் கை பகுதியில் காயம் அடைந்துள்ளார் ஜாமியா பல்கலைக்கழக மாணவர் சதாப் பாரூக். அவர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கோபால் சர்மா, துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே, பின்னோக்கி நடந்து செல்கிறார். அப்போது, பல்வேறு ஊடகத்தினர், காணொளி படக்கருவிகளை அந்த மிரட்டல்காரரை நோக்கி காண்பித்தபடி படம் எடுத்தபடியே நடந்து செல்கிறார்கள். அதே நேரம் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பின்பக்கமாக பல காவல்காரர்கள் நிற்கிறார்கள்.

பின்னால் நிற்கும் காவலர்கள், கோபால் சர்மாவைத் தடுக்க முனையவில்லை. இந்த நபர் துப்பாக்கியால் மாணவரை நோக்கி ஒரு சுற்று சுடுகிறார். அதன் பிறகுதான் சற்று வேகமாக நடந்து வந்த ஒரு காவல்காரர் அவர் கையை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை காவல்துறை வண்டியில் ஏற்றுகிறார். இதுதான் சமூக வலைதளங்களில் தீயாகிவரும் காணொளியில் காணப்படுகிற நிகழ்வு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.