கொரோனா சிகிச்சை குறித்த முரண்கள்: இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும்- நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ளது என்பதும். 15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிளாஸ்மா சிகிச்சை மூலம் குணமடைந்த முதல் கொரோனா நோயாளி டெல்லியை சேர்ந்த 49 அகவை நபர் கடந்த 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (ஏப்ரல்4) கொரோனா நுண்ணுயிரித் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவரின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாச கருவி உதவியுடனே வாழ்ந்து வந்த அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. நாளுக்கு நாள் உடல் நிலை மோசடைந்து கொண்டே சென்றது. இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அவரது குடும்பத்தினரே பிளாஸ்மா தானக் கொடையாளியையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பிளாஸ்மா தர முன்வந்தவருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து பிளாஸ்மா எடுப்பதற்காக 3வது முறையாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. அத்துடன் பிளாஸ்மா கொடையாளிக்கு ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் எச்.ஐ.வி.தொற்று உள்ளதா என்பதற்கான சோதனைகளும் நடத்தப்பட்டன. அவைகளும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானது. அதன்பிறகு பிளாஸ்மா கொடையாளியிடம் இருந்து இரத்தம் பெறப்பபட்டு பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டது. இதற்கிடையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு நடுவண் அரசின் அனுமதி பெற்ற மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் டெல்லி நோயாளிக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்தது. இதன்படி டெல்லி நோயாளிக்கு கடந்த 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122 தமிழ்ப்புத்தாண்டு அன்று (ஏப்ரல்14) இரவு அரசு நிர்ணயித்த விதிமுறைகளின் படி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த நான்கு நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. அன்று காலை அவரால் இயல்பாக மூச்சுவிட முடிந்ததால் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரமும் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். மருத்துவர் ஓமேந்தர் சிங், மருத்துவர் தேவன் ஜுனேஜா, மருத்துவர் சங்கீதா பதாக் ஆகியோர் மற்றும் செவிலியர்கள், அடங்கிய மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தனர். டெல்லிநோயாளி விரைவாக நலம் பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நிலையில் முழுமையாகத் தேறிய நிலையில் அவருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் இருமுறையும் கொரோனா இல்லையென முடிவுகள் வந்தன. இதையடுத்து பிளாஸ்மா சிகிச்சையால் முழுமையாக குணம் அடைந்த டெல்லி நபர் ஞாயிற்றுக்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அரசின் விதிமுறைகளின் படி அடுத்த இரண்டு கிழமைகள் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருப்பார். இந்த நிலையில்தான், கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ள செய்தி இன்று வெளியாகியுள்ளது. மருந்தேயில்லையென்று சொல்லப்படுகிற கொரோனாவை- தமிழகம் 54 விழுக்காடு குணப்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதுமே ஒராளவு குணப்படுத்தல் சிறப்பாகவே நடந்து வருகிறது. தமிழகம் கொரோனா சிகிச்சையில் இன்னும் சிறப்பான முன்னேற்றம தர பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், டெல்லியில் கொரோனாவின் கடுமையான பாதிப்பில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையில் குணம் பெற்று வந்திருக்கிற நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு இந்தச் சிகிச்சைக்கு அனுமதி அளித்திருக்கிற நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் பரிந்துரை வழிகாட்டுதல் ஏதும் இல்லாமல், நலங்கு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், ‘யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்திருப்பது மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கே அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெளிவான விளக்கமும், ஆபத்தான நோயாளிகளுக்குக் கூட, அனுமதியோடு கூட, பிளாஸ்மா சிகிச்சையை முன்னெடுக்கக் கூடாதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



