கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ளது. 15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் காட்டுத்தீ போல் தொடர்ந்து பரவி வருவதால், மாநில அரசுகளே, களத்தில் இருக்கிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அவர்களின் அனைத்து முயற்சிகளையும் அதிகரித்து வருகின்றன. கொரோனா நுண்ணுயிரியைக் குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்தது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதன்மூலம் டெல்லியில் 4 நோயாளிகளின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று நலங்கு அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:- பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது, இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் ஆய்வு செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு தொடங்கிய தேசிய அளவிலான ஆய்வு நடக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு தனது ஆய்வை முடிக்கும் வரை ஒரு வலுவான அறிவியல் சான்று கிடைக்கும் வரை, பிளாஸ்மா சிகிச்சை ஆராய்ச்சி அல்லது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சரியான வழிகாட்டுதலின் கீழ் பிளாஸ்மா சிகிச்சையை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. இது இன்னும் சோதனை நிலையில் உள்ளது, இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு கூட இந்த சிகிச்சையைப் பற்றிய கூடுதல் புரிதலை அடையாளம் காணவும் செய்யவும் ஒரு பரிசோதனையாகச் செய்து வருகிறது. இது அங்கீகரிக்கப்படும் வரை யாரும் அதைப் பயன்படுத்தக்கூடாது, இது நோயாளிக்கும் தீங்கு விளைவிக்கும் மேலும் சட்டவிரோதமாகும் எனக் கூறினார். மனித இரத்தத்தில் திரவநிலையில் பிளாஸ்மா உள்ளது. ரத்தத்தில் சுமார் 55 விழுக்காட்டு அளவுக்கு இருக்கும் பிளாஸ்மா ஊட்டச்சத்துக்கள் தண்ணீர், வைட்டமின்கள், தாது பொருள்கள், புரத பொருட்கள், ஹார்மோன்கள் மற்றும் ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய பிற காரணிகளை கொண்டிருக்கிறது. உடல் இயக்கவியலில் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு மிகவும் முதன்மையான பங்கு இருக்கிறது. இரத்தத்திலிருக்கும் அனைத்து கூறுகளையும் திரவமாக உடல் முழுவதும் சுமந்து செல்கிறது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றிற்கு எதிராக உடலை பாதுகாப்பதில் பிளாஸ்மாவில் உருவாகும் எதிர்ப்பு சக்திகள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. உடலுக்குள் படையெடுக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உடலை பாதுகாப்பதில் அந்த எதிர்ப்பு சக்திகள் பாதுகாப்பு கேடயமாக முன் நிற்கிறது. மனிதர்கள் எதிர்கொள்ளும் பல கடுமையான உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பிளாஸ்மா ஒரு முதன்மைப் பங்கினை கொண்டிருக்கிறது. இத்தகையை பிளாஸ்மாவை தொற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் நடைமுறை ஏற்கனவே இருந்து வருகிறது. ஏற்கனவே தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களின் பிளாஸ்மாவை பெற்று, அதனை தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும். குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்திகள் (இம்யூனோ குளோபின்கள்) தொற்றுநோய் நுண்ணுயிரிக்கு எதிராக போராடி வெற்றி பெற்று பலமடைந்திருக்கும். அதனை, சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும்போது அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து குணம் அடைய வாய்ப்பு உள்ளது. கொரோனா நுண்ணுயிரி குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் தாக்கத்தின் போதும், எபோலா தொற்றின் போதும் இந்த பழைய முறை சோதிக்கப்பட்டது. தற்போது, கொரோனா நுண்ணுயிரி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை முறையை நடைமுறைப்படுத்த சோதனை பணிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில்தான், கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் திடீரென்று கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியும் (வென்டிலேட்டர்) பயனளிக்காததால், சிகிச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



