Show all

பிள்ளையார் என்ற அழகிய தமிழ்ச் சொல்- விநாயகர் ஆனது எப்படி!

தன்னால் வெட்டுண்டு கிடக்கிற இந்த பிள்ளை யார்? என்று சிவன் பார்வதிதேவியிடம் கேட்டதனால் பிள்ளையார் எனப் பெயர் வந்தாக கதை

06,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயில் என்று சொல்லுகிறார்கள். பிள்ளையார் பட்டி பிள்ளையார் என்றாலும், விநாயகர் பட்டி விநாயகர் என்றாலும் பொருத்தமாக இருக்கிறது. அதெப்படி வந்திருக்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்?

பிள்ளையார் என்பது அழகிய தமிழ்ப் பெயர். சேயோன் என்பதும் பிள்ளையார் என்பதும் ஒரே பொருள் தருவதுதான். உருத்திரம் உருத்திரங் கண்ணனார் என்று பெயர்கள் சங்க காலத்திலேயே புழக்கத்தில் உள்ளன. எழுத்துலகில் உருத்திர ஆற்றல் என்பதைக் குறிக்க ‘உ’ என்று போட்டு அதை பிள்ளையார் சுழி என்கிற வழக்கமும் தமிழகத்தில் இருக்கிறது. ஆக பழந்தமிழகத்தில் குறிஞ்சி, குறிஞ்சிக்கான ஆற்றல் உருத்து வந்து ஊட்டும் ஆற்றல் உருத்திரம், குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோன், பிள்ளையார் ஆகிய ஆனைத்தும் குறிஞ்சி நிலத்தெய்வம் சேயோனையே குறிப்பதாக பழந்தமிழக மெய்யியல் இயங்கியிருக்கிறது.

இந்தக் குறிஞ்சி தெய்வத்திற்கு வழங்கிய மூன்று பெயர்களான சேயோன், உருத்திரன், பிள்ளையார் ஆகிய மூன்றும் பிற்காலத்தில் சுப்ரமணியன், பரமேஸ்வரன், விநாயகன் என்கிற மூன்று தெய்வங்களாக பார்ப்பனியர்களால் முன்னெடுக்கப்பட்டு விட்டன. தமிழர்களின் ஒற்றை தெய்வத்திலிருந்து பார்ப்பனியர்கள் அப்பன், பெரிய மகன், சின்ன மகன் என்ற மூன்று ஹிந்துத்துவா தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். கல்லில் வடிக்கப்பட்ட நடுகல் சிவலிங்கமாகி விட்டது. வீடுகளில் வைத்து வணங்கப்பட்ட மஞ்சள் பிள்ளையார் விநாயகர் ஆகிவிட்டார்.

புகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன்.

இவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முதன்மைத்துவம் கொண்டவை.

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் தரைமட்டமாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம், அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்தக் கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. 

தன்னால் வெட்டுண்டு கிடக்கிற இந்த பிள்ளை யார்? என்று சிவன் பார்வதிதேவியிடம் கேட்டதனால் பிள்ளையார் எனப் பெயர் வந்தாக கதையும் சொல்கின்றனர் பார்ப்பனியர்கள்? அப்படியானல் சிவன் பார்வதியிடம் பேசிய மொழி தமிழ்தானா என்று கேட்டால் சக்கி வாசுதேவ் சிவனுக்கு தமிழ் தெரியாது; சம்ஸ்கிருதம்தான் தெரியும் என்கிறார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.