ஆதாருக்கு அரசியல் சாசன ரீதியில் அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடுக்கப்பட்டன. அந்த மனுக்களில், ஆதார் திட்டம் தனிநபர் கமுக்கம் காத்தல் தொடர்பான அடிப்படை உரிமையில் குறுக்கிடுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, நடுவண் அரசின் சார்பில் அப்போதைய இந்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அணியமாகி, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், ஆதலால், தனிநபர் கமுக்கம் காத்தல் என்பது அடிப்படை உரிமையா? அல்லது அடிப்படை உரிமை இல்லையா? என்பது குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட அறங்கூற்றுவர்கள், அந்த மனுக்களை 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட மிகப்பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். ஆதாரைக் கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் இணைப்பு வழக்காக இது விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச அறங்கூற்றுமன்றம். தனிநபர் கமுக்கம் காத்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையா? என்பது குறித்து 9 உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு விசாரித்த வழக்கில் நாளை வெளியாகும் இந்த தீர்ப்பின் மூலமாகத்தான் ஆதார் கட்டாயமா? இல்லையா? என்பது தெரிய வரும். இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ். கேஹர், ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நாசீர் ஆகிய 5 அறங்கூற்றுவர்களைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. காரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரது வழக்குகளில், தனிநபர் கமுக்கம் காத்தல் என்பது அடிப்படை உரிமையாகாது என்று உச்ச அறங்கூற்றுமன்றத்தால் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, காரக் சிங் வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1960-ஆம் ஆண்டில் 6 அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வும், எம்.பி. சர்மா வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1950-ஆம் ஆண்டில் 8 அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வும் அளித்துள்ளன. இந்த 2 தீர்ப்புகளும் சரியானவைதானா? என்பது குறித்து, 9 அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு விசாரித்து, அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில், தனிநபர் கமுக்கம் காத்தல் உள்ளிட்டவை அடங்குமா? என்பது குறித்து முடிவெடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆதார் திட்டம் தொடர்பான வழக்கில் நடுவண் அரசின் சார்பில் வாதிடும் நடுவண் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலையும், மனுதாரர்கள் சார்பில் வாதிடும் மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தாதர், ஷியாம் திவன், கோபால் சுப்பிரமணியம், ஆனந்த் குரோவர் ஆகியோரையும், அவர்கள் தரப்பு விளக்கங்களை தாக்கல் செய்யும்படி அறங்கூற்றுவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ். கேஹர் தலைமையில், அறங்கூற்றுவர்கள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபேய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷாண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகிய 9 அறங்கூற்றுவர்களைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது. நடுவண் அரசின் வானளாவிய அதிகார அமைப்பான உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பு மோடி அரசின் எண்ணமாக அல்லாமல் வேறுவகையாக அமைவதற்கு வாய்ப்பே இல்லை. தீர்ப்பு மக்கள் எண்ணத்திற்கு மாறுபட்டு அமையுமானால் 2019ல் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்குவார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



