ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்பது ஒரு தமிழ்ச்சொலவடை. அது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் தெரிந்திருக்கிறது. 11 கிமீட்டரில் கலவரம் நடந்த போதும், டிரம்ப் 21 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்பந்தம் போட்டுச் சென்றிருக்கிறார். அமெரிக்காவின் வணிகப்பொருள் போர்கருவிகள். 18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய். இந்தக் கடனை அடைக்க, உருப்படியாய் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்க முயலாமல், அயல் நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச் சட்டமும், நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பிறந்த யாருக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களையெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நாடற்றவர்கள் ஆக்கும் வகைக்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன இந்த அரசுகள். இந்தியாவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலமாக வரும் வருமானமும் வருமான வரி மூலமாக கிடைக்கும் வருமானமும் கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக குறையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மோடி தலைமையிலான நடுவண் பாஜக அரசு நேரடி வரி வசூல் மூலமாக 13.5 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் கம்பெனிகள் தொழில் நிறுவனங்கள் சேவை அமைப்புகளின் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி பாதிக்கப்பட்ட காரணத்தினால் வரி வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. தற்பொழுது கடந்த 11 ஆண்டுகளில் மிக குறைவான வளர்ச்சி விகிதத்துடன் இந்தியா உள்ளது. நடப்பு நிதியாண்டின் நேரடி வரிகள் வருமானம் 7.3 லட்சம் கோடியாக உள்ளது என நேரடி வரி வருமானத்துறை மதிப்பிட்டுள்ளது. இது சென்ற ஆண்டு நேரடி வரி வருமானத்தோடு ஒப்பிடும்போது 5.5 விழுக்காடு குறைவானதாகும். வரிகள் இவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை எட்டாதது பெரிய சிக்கல் அல்ல. ஆனால் சென்ற ஆண்டைவிட நேரடி வரிகள் மூலமான வருமானக் குறைவு பெரிய சிக்கல் என நிதி அமைச்சக அதிகாரிகள் கருதுகின்றனர். சரக்குசேவை வரியிலும் நினைத்த அளவு திருப்திகரமான வசூல் இலக்கை எட்ட முடியவில்லை. நடப்பு ஆண்டில் சரக்கு சேவை வரிகள் மூலமாக கிடைக்கும் வருமானம் 3 லட்சம் கோடி அளவுக்கு குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலை சமாளிக்க அரசு பெருமளவில் வெளிநாட்டுக் கடன் பெறுவது ஒன்றே வழியாக அமையும். என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். இந்தியா விடுதலை பெற்ற கடந்த 70 ஆண்டுகளில், நடப்பு ஐந்தாண்டுகளில் மட்டும் கடந்த 65 ஆண்டுகளில் வாங்கிய கடனின் பாதி அளவிற்கு கடன் வாங்கி விட்டது. தொடர்ந்தும் கடன் வாங்கினால் இந்தியா என்ன ஆவது? இந்த நிலைக்கு காரணம் என்ன? தீர்வு என்ன என்று சிந்திந்து காய் நகர்த்தினால் மட்டுமே இந்தியாவிற்கு கிடைத்திருப்பது உண்மையான விடுதலை என்றாகும். இந்தியாவிற்கு கடன் கொடுப்பது யார்? உள்நாட்டு வங்கிகளும், உலகவங்கியும். உள்நாட்டு வங்கிக்கு எப்படி இலாபம் சாத்தியமாகிறது? உலக வங்கிக்கு எப்படி இலாபம் சாத்தியமாகிறது? உலகவங்கியின் பெரும்பங்கு வைத்திருப்பது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு எப்படி இலாபம் சாத்தியம் ஆகிறது? கேள்வி கேட்டுப்பார்க்க வேண்டும். உலக நாடுகளின் போர் பயம்தாம் அமெரிக்காவின் வணிகச் சந்தை. அமெரிக்காவின் வணிகப்பொருள் பாதுகாப்புத் தளவாடங்கள். தற்போது இந்தியா வந்த டிரம்ப் 21 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்பந்தம் போட்டுச் சென்றிருக்கிறார். நடுவண் பாஜக அரசு- டிரம்ப்க்கு 21 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் சேவையளிக்க ஒப்புதல் கொடுத்துவிட்டு 11கீமீட்டருக்குப் பக்கத்தில் வன்முறை-தீயுட்டல்-துப்பாக்கிச்சூடு கலவரத்திற்கு காரணமாகிறது. டிரம்ப் கவலைப்பட்டாரா? பெட்ரோல் வளத்தால் எல்லையில்லாமல் வருமானம் ஈட்டுகிற அரபு நாடுகள்கூட முழுக்கமுழுக்க அமெரிக்காவின் பாதுகாப்பை நம்பியிருக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய சமாதான நாடு இந்தியா. எப்படி? பன்முகப்பட்ட பண்பாடுகள், பல்வேறு மொழிகள். எப்படி இணைவு சாத்தியம்? அன்பால் மனித நேயத்தால் இணைந்திருக்கிறது! அதற்கு இந்தியாவின் எண்ணற்ற அறநூல்கள் வழிகாட்டுகின்றன. அதிகாரத்தால் இது சாத்தியமாகிறது என்று மனப்பால் குடித்து காங்கிரஸ் ஹிந்தியைத் திணித்து வந்தது. தற்போதைய பாஜக அரசும் ஆம் அதிகாரத்தால்தான் இது சாத்தியமாகிறது என்று மனப்பால் குடித்து ஹிந்தியோடு, ஹிந்துத்துவாவையும் சேர்த்து திணித்து வருகிறது. அதற்குத் தோதாக நீட், சரக்குசேவைவரி, பணமதிப்பிழப்பு, ஹைட்ரோ கார்பன் என்று- போடுகிற திட்டங்கள் அனைத்தையும் மாநில உரிமைகளைப் பிடுங்கும்- நடுவண் அரசிடம் அதிகாரத்தைக் குவிக்கும்- அதிகார நோக்கிலேயே முன்னெடுக்கிறது நடுவண் பாஜக அரசு. இதனால் தொழில் நசிகிறது. வேளாண்மை சுருங்குகிறது. வெறுமனே அதிகபட்சம் ஐந்து விழுக்காடு வரை இருந்த வரியை மேலும் மேலும் அதிகரித்து 18 விழுக்காடாக உயர்த்தியும் கூட- பல பொருட்களுக்கு மாநில வரிகள் மட்டுமே (தமிழ்நாட்டில் டிஎன்ஜஎஸ்டி) அடுத்த மாநிலங்களுக்கு வணிகத்திற்கு செல்லும் போது மட்டுமே இந்திய அரசின் வரி (சிஎஸ்டி) என்ற நிலையை மாற்றி அனைத்துப் பொருட்களுக்கு நடுவண் அரசின் 18விடுக்காடு வரி என்று வரியை 400விழுக்காடு வரை உயர்த்தியும் கூட- சரக்குசேவை வரி வருமானமும், வருமான வரி வருமானமும் குறைந்;து கொண்டிருக்கிறது என்பது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். இந்தியாவில் மொழிச்சமத்துவத்தைப் பேணி, இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாத்து, இந்திய மருத்துவம் இந்திய நலங்குத் துறையைக் கொண்டாடி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை அனைத்து மாநிலங்களுக்கும் முன்னெடுத்து, சமாதானத்தை அமெரிக்காவிற்கு போட்டியாக சந்தைப்படுத்தினால் இந்தியா ஒரு உலக வங்கியை நிறுவமுடியும். பழந்தமிழர் நாணயம் உலகச் செலாவணியாக இருந்ததைப் போல, இந்திய ரூபாயை உலகச் செலாவணியாக முன்னெடுக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



