Show all

109503 ரூபாய்! நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன்

நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய். இந்தக் கடனை அடைக்க, உருப்படியாய் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்க முயலாமல், அயல் நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச் சட்டமும், நாற்பது ஆண்டுகளுக்;கு முன் இந்தியாவில் பிறந்த யாருக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களையெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நாடற்றவர்கள் ஆக்கும் வகைக்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன இந்த அரசுகள்.

17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எல்லா நாடுகளுமே மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உலக வங்கி மற்றும் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்குவதை நடைமுறையாகக் கொண்டுள்ளன.

ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5119 வரை (2018-ம் ஆண்டு செப்டம்பர்) இந்திய அரசு 82,03,253 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. அதுவும்  கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 51.7விழுக்காடு இந்தியாவின் கடன் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அதவாது இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து வாங்கிய கடன் அளவில் பாதி அளவுக்கு அதிகமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நடுவண் பாஜக அரசு கடன் வாங்கியிருப்பது தெரிய வருகிறது.

இந்த ஆண்டு நடுவே, ஐ.நா அவை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது? ஒரு கணக்கை முன்னெடுத்தால் கிடைக்கும் விடை:- ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய்.

உலக வங்கியில் வாங்கப்படும் கடன் தொகைக்கு 2 அல்லது 3 விழுக்காடு வட்டியாம். இதுவே உள்நாட்டுக் கடன் என்றால் வட்டி அதிகமாக இருக்கும் என்று தெரியவருகிறது. 

இந்திய அரசு அடிக்கடி கடன் வாங்குவதால், ஆண்டுதோறும் இந்தியா கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மாறிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கான விடை நடுவண் வரவுசெலவுத் திட்டத்தில் கிடைத்த வகையில்: உலக வங்கிக்கு கடந்த 2016-17 நிதியாண்டில் 5,144.26 கோடி ரூபாயும், 2017-18 நிதியாண்டில் 5,950.76 கோடி ரூபாயும் வட்டி செலுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேபோல உள்நாட்டு கடன்களுக்காக 2016-17 நிதியாண்டில் 3,70,589.82 கோடி ரூபாயும் 2017-18 நிதியாண்டில் 4,04,131.58 கோடி ரூபாயும் வட்டியாக செலுத்தியுள்ளது. 

அடுத்து தமிழ் நாட்டுக் கடனுக்கு வந்தால்:- தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவுகள் 1,80,618.71 கோடி ரூபாயாகவும், வருவாய்ச் செலவினங்கள் 1,99,937.73 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதன் விளைவாக, 2018-2019 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை 19,319.02 கோடியாகும்.

தமிழ்நாட்டின்  2020 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 அன்று, நிகர நிலுவைக் கடன்கள் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும். என்று தெரியவருகிறது.

தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2018 ஆண்டளவில் தமிழகத்தின் மக்கள் தொகை 80351195 என்பதாகத் தெரியவருகிறது. 

ஒவ்வொரு தமிழனின்  (இந்தியக் குடிமகனின்) தலைக்கும் தோராயமாக 60,034 ரூபாய் இந்திய அரசு கடன் வாங்கியிருக்கிறது. தமிழக அரசோ 49469 ரூபாய் கடனாக வாங்கியுள்ளது. இரண்டு அரசுகளும் சேர்ந்து ஒரு தமிழன் தலைக்கு 109503 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறது. 

இந்தக் கடனை அடைப்பதற்கு உருபடியான திட்டம் எதையாவது நடுவண் பாஜக அரசு முன்னெடுக்குமானால் தலைவணங்கி பாராட்டலாம். ஆனால் விடுதலை பெற்று 71வது குடியரசு நாள் கொண்டாடி முடித்திருக்கிறோம். கடந்த அறுபத்தி ஐந்து ஆண்டுகளில் வாங்கப் பட்ட கடனின் பாதி அளவிற்கு நடுவண் பாஜக அரசு இந்த ஐந்து ஆண்டுகளில் நம் தலைமீது விதித்திருக்கிறது. 

இந்த நிலையில், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அயல் நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச் சட்டமும், நாற்பது ஆண்டுகளுக்;கு முன் இந்தியாவில் பிறந்த யாருக்கும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர்களையெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நாடற்றவர்கள் ஆக்கும் வகைக்காக தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையையும் முன்னெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் மீது திட்டமிட்ட கலவரத்தைத் தூண்டி நாட்டின் சொத்துக்களை ஏரியூட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வகைக்கான கடனையும் நாம்தாம் சுமக்க வேண்டியிருக்கும். 

செயலலிதா மரணத்திற்குப் பின்பு, இந்த பாஜக ஒத்துழைப்பில் ஆட்சி பெற்றிருக்கிற தமிழக எடப்பாடி அரசு, நடுவண் பாஜக அரசின் தேவையற்ற முன்னெடுப்புகளுக்கு பணிந்து ஒத்துழைத்துக்  கொண்டிருக்கிறது. பாதிக்கப் படப்போவது மக்களே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.