Show all

பரபரப்பு கிளப்பிய நபரை காவல்துறை தேடி வருகிறது! மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்தவர்

‘அவசரம்! கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது’ என்ற விளக்கத்துடன் மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக  ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்து பரபரப்பு கிளப்பிய நபரை காவல்துறை தேடி வருகிறது.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குஜராத்தில் உள்ள மாஉயர படேல்  சிலை ரூ 30 ஆயிரம் கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக ஓஎல்எக்ஸ் இயங்லைத் தளத்தில் ஒரு விளம்பரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தில் நர்மதை ஆற்றங்கரையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ 3000 கோடியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிலை உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. இது 597 அடி உயரம் கொண்டதாகும். இந்த சிலை அவரது 143 ஆவது பிறந்த நாளையொட்டி தலைமைஅமைச்சர் மோடியால் திறக்கப்பட்டது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சுற்றுலா தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்தச் சிலையும் மார்ச் 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. 

இந்த நிலையில் பழைய பொருட்களை இயங்கலை மூலம் விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் ஓஎல்எக்ஸ்ஸில் இந்தச் சிலை விற்பனைக்கு என வந்த விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்வதாக வந்த தகவல் அந்தச் சிலையை பராமரிக்கும் அதிகாரிகளை அதிர செய்தது. 

‘அவசரம், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொய்யானது என தெரியவந்ததை அடுத்து ஓஎல்எக்ஸ் நிறுவனம் அந்த விளம்பரத்தை நீக்கியது. 

இதுகுறித்து தகவலறிந்த படேல் சிலை நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து படேல் சிலை நிர்வாக உதவி ஆணையர் நிலேஷ் துபே கூறுகையில் அரசுக்கு அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் யாரோ ஒரு மர்ம நபர் இதுபோன்ற விளம்பரத்தை தந்துள்ளார். அவர் விளம்பரம் கொடுத்ததற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓஎல்எக்ஸ் நிறுவனமும் இந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இதை பிரசுரித்துள்ளனர் என துபே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.