Show all

பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிஆணை

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத்தை சேர்ந்த பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிஆணையை, அறங்கூற்றுமன்றம் பிறப்பித்துள்ளது.

மற்றொரு தலைவரான லால்ஜி பட்டேலுக்கு எதிராகவும் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் உணவகம் ஒன்றில் ஹர்திக் பட்டேலை ரகசியமாக சந்தித்து பேசியதாக கண்காணிப்பு படக் காட்சிகள் சில ஊடகங்களில் வெளியானது. ஹர்திக் பட்டேல் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறாரோ, அந்த கட்சிக்கு தேர்தலில் அது கணிசமான லாபத்தை ஈட்டித் தரும். எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் அவர் எதற்கு ஆதரவு அளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் அளித்த பேட்டியில், இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு செவி சாய்த்தால், பட்டேல் இனத்தவர்கள் சார்பில், காங்கிரசை ஆதரிப்பதில் தவறில்லை. பாஜக பெரிய திருடன் என்றால் காங்கிரஸ் சின்ன திருடன், அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.

பாஜக இந்த நிலையில் பட்டேல் தலைவர்கள் மீதான, சட்டத்தின் மூலமான, தன்ஆட்டத்தை தொடங்கியுள்ளது அது பாஜகவுக்கே எதிர்வினையாகப் போகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.