Show all

நூறுபேருக்கும் ஒரே ஆதார்எண் மகாராஷ்டிர அரசு திணறல்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் போலிகளைத் தடுப்பதற்காகவும், போலி கணக்கின் பேரில் உழவர் கடன் தள்ளுபடி பெறுவோரை கண்டறிவதற்காகவும் அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் கடன் பெற தகுதியான உழவர்கள் இயங்கலையில் பதிவு செய்ய வேண்டும் எனவும், இதில் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இயங்கலையில் பதிவு செய்த பயனாளிகளின் பட்டியலை மகாராஷ்டிர கூட்டுறவு துறை அதிகாரிகள் சரி பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பட்டியலில் இடம்பெற்ற 100 க்கும் மேற்பட்ட உழவர்களுக்கு ஒரே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், போலி பயனாளர்களை ஆதார் எண்ணை வைத்து கண்டுபிடித்து விடலாம் என நினைத்தோம். ஆனால் பல உழவர்களுக்கும் ஒரே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதால் இப்போது அவர்களின் முகவரிகளை எப்படி சரி பார்ப்பது என எங்களுக்கு தெரியவில்லை. இதை பணியாளர்களைக் கொண்டு சரி பார்த்தால் அதற்கு வாரக்கணக்கில் கால அவகாசம் ஆகும். பயிர் கடன் தள்ளுபடி திட்டம் தாமதிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே வேளாண் துறையினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது மேலும் கால தாமதத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

வங்கிகள் கொடுத்துள்ள புள்ளி விபரங்களின்படி சரி பார்த்தால் பல உழவர்களின் கடன்தொகைக்கும், அவர்களின் நில அளவுக்கும் தொடர்பில்லாமல் உள்ளது. பயிர் காப்பீட்டு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என சமீபத்தில் நடுவண் அரசு அறிவித்துள்ளது. ஆனால் பலருக்கும் ஒரே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதால் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை எப்படி அமல்படுத்துவது என தெரியாமல் மகாராஷ்டிர அரசு திணறி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.