Show all

குஜராத் தேர்தல் முடிவு இந்திய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த பாராளுமன்ற தேர்தலில் - கம்பீரமான தோற்றமும், வசீகரமான பேச்சும் வலிமை மிக்க இந்தியாவின் வலிமையான தலைவராக அடையாளப்படுத்தியது.

ஊழல் இல்லாத ஆட்சி, கருப்பு பண மீட்பு, உழவர்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது போன்ற வாக்குறுதிகள் மோடி மீதான நம்பிக்கையை வலுப்பெற வைத்தது.

அதனால் பா.ஜனதா இமாலய வெற்றியை ருசித்தது. விடுதலை இந்தியாவில் தனிக்கட்சி 283 இடங்களை கைப்பற்றி சாதித்தது மிகப்பெரிய சாதனை.

ஆனால் மோடி மீது கொண்டிருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறிவிட்டதாகவே மக்கள் தற்போது கருத தொடங்கி இருப்பது அந்த கட்சியின் வீழ்ச்சிக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

தலைமை அமைச்சராக மோடி பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகளை வலம் வந்தது, கம்பீரமாக சென்று வருகிறார்; அந்நிய முதலீடுகள் வந்து குவியும் என்ற நம்பிக்கையால். பதவி ஏற்ற 17 மாதங்களில் 28 நாடுகளை சுற்றிவிட்டார் உள்நாட்டு பாபா ராம்தேவும் அமித்சா மகனும் பணக்கார பட்டியலுக்கு வந்ததைத் தவிர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

பொதுவாகவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் புதிய திட்டங்களை வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் அமல்படுத்துவார்கள். அந்த புதிய திட்டங்களின் தாக்கம் கொடுக்கப்போகும் பலனை விட பாதிப்புதான் மக்களிடம் பேசப்படும். எதிரொலிக்கும்.

மோடி கொண்டுவந்த எல்லா திட்டங்களிலுமே தலைகீழ்.

திட்டத்தின் பெருமைதான் பேசப்பட்டது எதிரெலித்தவைகள் பாதிப்புகளே.

முதலில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை! இதன்மூலம் கருப்பு பணம் வெளியே வந்துவிடும். வாழ்க்கைத்தரம் உயரும் என்ற நம்பிக்கையுடன் அதனால் ஏற்பட்ட சிரமங்களையும் மக்கள் தாங்கி கொண்டனர்.

ஆனால் கருப்பு பணம் வெளியே வந்ததா? ஒழிக்கப்பட்டதா? நாட்டில் மொத்த பணபுழக்கம் 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக இருந்தது. அதில் 99 விழுக்காடு ரூபாய் தாள்கள் திரும்பி வந்துவிட்டன.

அப்படியானால் கருப்பு பணம் எங்கே? ஏன் வரவில்லை? ஆனால் புதிய ரூபாய் தாள்கள் அச்சடிக்க செலவானது ரூ.21 ஆயிரம் கோடி. ஆக இந்த திட்டம் படுபடு தோல்வியில் முடிந்துவிட்டது.

அடுத்ததாக அமலுக்கு வந்த சரக்குமற்றும் சேவைவரி.

பல வரி செலுத்தியபோது என்ன விலைக்கு பொருள்கள் விற்றதோ இப்போது அதே விலையில் கூடுதலாக சரக்குமற்றும் சேவைவரியும் சேர்த்து விற்பனை செய்யப்படுவதால் அந்த சுமையும் சாதாரண மக்கள் தலையில் விழுந்து இருக்கிறது.

புதிய விதிமுறைகளால் தொழில் நகரங்கள் முடங்கிக் கிடப்பதாகவும், ரியல் எஸ்டேட் உள்பட பல தொழில்கள் வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாகவும் ஆதங்கப்படுகிறார்கள்.

எதிர்பார்த்த எதுவும் நடக்காததாலும் கண் முன்னே ஏமாற்றத்தை சந்திப்பதாலும் மோடி மீதான நம்பிக்கை தகர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மேலும் சில கடினமான முடிவுகளை எடுக்கப்போவதாக மோடி அறிவித்து இருப்பது வயிற்றில் புளியை கரைக்கிறது.

தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் மக்களின் ஏமாற்றம் ஆட்சி மாற்றத்துக்குத்தான் வழிவகுக்கும்.

தோடக்கத்தில் மோடியின் முன்னால் சிங்கமும், சுண்டெலியும் போல சித்தரிக்கப்பட்ட ராகுல் இப்போது மோடிக்கு புலி பாய்ச்சலாக பதிலடி கொடுத்து வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மோடி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துவிட்டதாக பகிரங்கமாக விமர்சிக்கிறார். அவரது விமர்சனங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மோடி பலவீனமான தலைமை அமைச்சர் என்று விமர்சிக்கும் ராகுல் பல விசயங்களை சுட்டிக்காட்டி அவற்றில் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? என்று கேள்வி கேட்டு திணறடிக்கிறார்.

தனக்கு ஈடான போட்டியாளர் களத்தில் இல்லை என்று கருதிய மோடிக்கு ராகுல் பெரிய போட்டியாளராக உருவெடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில் ராகுல் வளர்ச்சி காங்கிரசாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜனதாவுக்கு தோல்விக்கான அறிகுறிகளே தென்பட்டதால் தான் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி போட்டுள்ளதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து 3 முறை குஜராத் சென்று பலதிட்டங்களை மோடி அறிவித்துள்ளார்.

ராகுலும் குஜராத் தேர்தலை ஒரு சவாலாக ஏற்று களம் இறங்கிவிட்டார். பல ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி என்பது காங்கிரசுக்கு கனவாகவே இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் அந்த கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் ராகுல் இருக்கிறார். அதற்கு ஒரு சாட்சியாக சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையும், கேரளாவில் வேகரா தொகுதியில் பா.ஜனதா 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டதையும் கருதுகிறார்கள்.

ராகுல் தொடங்கி இருக்கும் இந்த ஆவேச ஆட்டம் மோடிக்கு ஈடுகொடுக்குமா? அல்லது மோடியை வீழ்த்துமா? என்ற பரபரப்பு அகில இந்திய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கும் மோடிக்கும் வேறுபாடு ஏதும் இல்லை. இருவரும் தமிழர் அடிப்படைகளை சிதைக்கிற கம்மணாட்டிகள்தான்.

மாநிலங்களில் மாநிலக் கட்சி ஆட்சி! நடுவண் அரசில் மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சி

என்பது தான் இந்தியாவில் தமிழகம் மிகச் சிறப்பான மாநிலம் என்பதை நிலை நாட்டிட உதவும்.

தமிழகம்- வரலாற்றை, தமிழர் அடிப்படைகளை, சங்ககால பொற்காலத்தை மீட்டெடுக்க முடியும்.

தமிழகம் முன்னோடி மாநிலமானால், தமிழ் உள்ளிட்ட 22மொழிகள் நடுவண் அரசின் நிருவாக மொழியாகவும், மாநில மொழிகள் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் முன்னெடுக்கப் பாடுபடும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.