Show all

கண்டனப் பேரணியில் மம்தா ஆவேசம்! தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள்

நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. தாழ்த்தப்பட்டோர் அதிகளவில் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார்.

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி காமக்கொடூரன்கள் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கும் ஆளான நிலையில் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் கண்டன போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்தக் கொடூர அடாவடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று மாலை கண்டன பேரணி நடத்தினார். பிர்லா கோளரங்கத்துக்கும், மேயோ சாலை காந்தி சிலைக்கும் இடையே 2 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பேரணி நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆறு மாதங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கத்துக்கு பின்னர் மம்தா பானர்ஜி நடத்திய முதல் பேரணி இதுதான்.

இந்த பேரணியில் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நுண்நச்சு பெருந்தொற்று இல்லை. பாஜக தான் பெருந்தொற்று. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக நடத்தப்படுகிற அட்டூழியங்கள்தான் மிகப்பெரிய தொற்று நோய் ஆகும்.

நாம் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இப்படிப்பட்ட அட்டூழியங்கள் நடப்பது துளியும் ஏற்கத்தக்கது அல்ல.

நாடு முழுவதும் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல், மக்களுக்கு எதிரான அரசாக, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசாக,  வேளாண் பெருமக்களுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பார்ப்பனியர்கள்- அரசுகள் ஆதரவோடு- சிலஆயிரம் ஆண்டுகளாக முன்னெடுத்த அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகளினால்- பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் வரலாற்று அடிப்படையாக பின்னடைந்த மக்கள் குழுக்களையே பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கிறோம். 

தலித் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் வாழ்க்கை பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகளைக் காட்டிலும் படுகோவலமாக தாழ்த்தப்பட்டதால் அந்த மக்கள்  குழுக்களையே தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கிறோம். 

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்களாவார்கள். எடுத்துக்காட்டாக, 19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொத்தடிமைப் பண்ணையாட்களாக உழன்ற பொழுது பிற்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் குத்தகை உழவர்களாக வேலை செய்து வந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டு சமூகப் புறக்கணிப்புகளால் துன்புற்றனர். 

பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுடனும் மற்றப் பிராமணரல்லாத உயர்வகுப்பினருடனும் தங்களுடைய பொதுவானா பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நலன்களை முன்னிட்டு இணைந்த அரசியல் வரலாற்று நிகழ்வே திராவிட இயக்கத்தின் எழுச்சியாக அமைந்தது.

பிற்படுத்தப்பட்டோர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய, திராவிட இயக்கங்களின் தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5விழுக்காடும், இசுலாலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5விழுக்காடும் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு 20 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

பாஜக- இந்த நிலைகளுக்கு எதிராக- அதிகாரத்தின் துணையோடு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் முன்னெடுத்து வருகிறது என்பது நடப்பு நிகழ்வாகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.