Show all

கமல் சாடல்! இராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது

இராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச மாநில காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடான நிகழ்வு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

17,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன. 

பத்தொன்பது அகவை சிறுமியைக் கூட்டுப்பாலியல் வன்முறை நடத்திய நான்கு கொடூரன்கள், அந்தச் சிறுமியின் கழுத்தை நெரித்தும், முதுகெலும்பை உடைத்தும் கொலை செய்திருக்கிறார்கள்.

இதன் அதிர்வலைகள் ஓய்வதற்கு முன்பே பல்ராம்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 22 அகவை இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது காட்டுமிராண்டி கும்பல் ஒன்று. இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற இராகுல்காந்தியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன் அவரை கீழே தள்ளி அவமதித்தது. இந்த செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலும் தனது எதிர்ப்பை கீச்சுவில் பதிவு செய்துள்ளார்.

அதில், இராகுல்காந்தியிடம் உத்தரப்பிரதேச காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது என்றும் குண்டர்கள் ஆட்சி நடத்தவா மக்கள் வாக்களித்தார்கள் எனவும் வினவியிருக்கிறார். மேலும், இது போன்ற கீழ்த்தரமான நிகழ்வுகளை பெரும்பான்மையானோர் கண்டிக்காவிட்டால் வெறுப்புணர்வு தான் அதிகரித்து பரவும் எனக் கூறியிருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.