Show all

பீகாரில் பாஜகவின் வெற்றிதோல்வி- தமிழகத்தில் எதிரொலிக்குமா! தமிழ்நாடு மாதிரியான நிலைமையில் உள்ள பீகார்

பிகாரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு போல உள்மாநிலக் கட்சிகளை ஆதரித்து வரும் மனநிலை மக்களைக் கொண்டதாக இருக்கிறது பீகார். தமிழ்நாட்டில் போலவே உள்மாநிலக் கட்சிகளை மிரட்டிப் பணியவைக்கும் தொணியில் ஈடுபட்டு வருகிறது பல்மாநிலக்கட்சியாக கிளைத்து ஒன்றிய ஆட்சியைத் தக்க வைத்திருக்கிற தெனாவட்டில் பாரதிய ஜனதா கட்சி

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு பதிகை தொடங்கிவிட்டது. இந்த மாதமும் அடுத்த மாதமும் என மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பாஜகவும் இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட கட்சியான லோக் ஜனசக்தியும் இருக்கிறது. 

பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் 124 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் எனத் தெரிகிறது. எஞ்சியுள்ள 119 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளான பாஜக, லோக் ஜனசக்தி, ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படவுள்ளன. அந்த 119 தொகுதிகளில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு நிதிஷ் 27 இடங்கள் ஒதுக்குவதாக தெரிகிறது. 

ஜனசக்தி கட்சிக்கு 60 தொகுதிகளுக்கு குறைத்து இடங்கள் கொடுத்தால் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள் உட்பட 143 தொகுதிகளில் தனித்து களம் காண தாங்கள் தயாராக உள்ளோம் என அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிராக் பாஸ்வான். இவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் ஆவார். தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மருத்துவமனையில் இருப்பதால் தேர்தல் பணிகளுக்கு தலைமையேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார் சிராக். 

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி வெளியேறுவதை பாஜக தலைமை விரும்பவில்லை. மக்கள் அனுதாபம் லாலு பிரசாத் சிறைவாசம், உடல்நலக் குறைவு என உள்ள நிலையில் மக்களின் அனுதாபம் தமிழ்நாட்டில் திமுக போல முன்னால் ஆளும் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தச் சூழலில் லோக் ஜனசக்தியும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அதனால் பாதகம் தான் ஏற்படும் எனக் கருதுகிறது பாஜக. இது தொடர்பாக நிதிஷ்குமாரிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் அவரின் துணிச்சலான பிடிவாதத்தால் கூட்டணியில் குழப்பம் நீடித்துக்கொண்டே செல்கிறது. 

ஏறத்தாழ தமிழ்நாட்டின் நிலைமையே பீகாரின் தேர்தல் களத்தில் பிரதிபலிப்பதால்- பிகாரில் பாஜகவின் வெற்றி தோல்வி நிலை தமிழகத்திலும் எதிரொலிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.