Show all

பள்ளிக்கூடமே ஒழுங்காகச் செல்லாமல் நீட் பயிற்சிக்கு மட்டுமே சென்றாராம்! நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பீகார் மாணவி

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடந்து முடிந்த நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 

தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே தொடர்வண்டிகள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

பெரும் சர்ச்சைக்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. இதில் மற்ற பல மாநிலங்களை விட தமிழகத்தில் வெறும் 39.9 விழுக்காட்டு பேர்களுக்கு மட்டுமே தேர்ச்சி வழங்கப் பட்டிருந்தது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநில மாணவர்கள், தமிழகத்தை விடவும் அதிகஅளவில் வெற்றி பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த ஒரே மாணவி மட்டுமே, அம்மா மருத்துவர் அப்பா மருத்துவர் என்ற பின்புலத்தில் 12வது இடம் பிடித்தார்.

இந்த தேர்தவில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருந்த மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. 

கல்பனா குமாரி பீகார் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்தான். ஆனால், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாத நிலையில் விதியை மீறி தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் சேர்ந்த கல்பனா குமாரி கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரமாக தேர்வுக்கு தயாராகியுள்ளார். இதனால், பனிரெண்டாம் வகுப்பு தேர்வைப் பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை. டெல்லியில் தங்கி பயிற்சி பெற்றதால், அவர் பீகாரில் உள்ள பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் இருந்தது.

இதனால் பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது வகுப்புக்கு சரியான முறையில் அவர் செல்லவில்லை. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 விழுக்காடு வருகைப்பதிவு கட்டாயம் ஆகும். ஆனால் அவருக்கு போதிய வருகைப்பதிவு இல்லாதபோதும், சிறப்பு அனுமதி வழங்கி அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பீகார் மாநில கல்வியமைச்சர் கிருஷ்ணாந்த் வர்மா கூறுகையில், 'நீட் தேர்வில் முதலிடம் பிடித்து மாணவி கல்பனா குமாரி பீகாருக்கு பெரிய அளவில் பெருமை சேர்த்துள்ளார். அதை அனைவரும் பாராட்ட வேண்டும். அதை விடுத்து அவரது வருகைப்பதிவு குறித்து சர்ச்சை எழுப்புவது தேவையில்லாதது. உரிய விதிமுறைகளை பின்பற்றியே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். அவரை பற்றி யாரும் சர்ச்சை எழுப்ப வேண்டாம்' எனக் கூறியுள்ளார்.

நம்ம முதல்வர் எடப்பாடியாக இருந்தால்,  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் சாவூருக்கு பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்திருப்பார்.

நல்லது கல்வி அமைச்சரே! மாநிலக்கல்வியில் பயின்ற மாணவியை, விதிமுறைகளையெல்லாம் தளர்த்தி, நீட்டில் முதன்மை பெறவைத்து முள்ளை முள்ளால் எடுத்திருக்கின்றீர்; வணங்குகிறோம். 

ஏன் நம்ம முதல்வரும் விதிகளை தளர்த்துவாரே? போராடும் மக்களை பதிமூன்று பேரை பச்சை படுகொலை செய்ய; என்கிறார்கள் மக்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.