24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெல்லை மாவட்டத்தில் இருந்து பிழைப்புத்தேடி மும்பை வருபவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவராக இருக்கிறார், வேங்கையன். அவருக்கு துணையாக இருக்கிறார், அவரது மகன் காலா என்ற கரிகாலன். அந்த இடம் தாராவி குப்பத்தை காலி செய்துவிட்டு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடுகிறார், நானா படேகர். அதற்கு வேங்கையன் குறுக்கே நிற்கிறார். காலாவும் சரினாவும் காதலிக்க, பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது நானா படேகர் ஆட்கள், வேங்கையனை கொன்று தாராவிக்கு தீ வைக்கிறார்கள். அந்த சம்பவத்தோடு மணப்பெண் குடும்;பத்தினர் நாசிக் சென்றுவிடுகிறார்கள். அப்பாவை கொன்றவர்களை வேட்டையாட களம் இறங்குகிறார் காலா. மும்பை தேர்தலில், காலாவை எதிர்த்த ஆளும் கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்படுகிறார். நானா படேகர் வீறு கொண்டு தானே களம் இறங்குகிறார். காலாவைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில், அவர் இறந்துவிட்டதாக நானா படேகர் நினைக்கிறார். தாராவியில் மீண்டும் அடுக்குமாடி கட்டிடம் கட்ட நினைக்கிறார். அது நடந்ததா? இல்லையா? என்பதுதான் உச்சகட்டம். தாராவிக்கு காலாவைத் தேடி வரும் நானா படேகர், திரும்பி போக முயற்சிக்க, என் அனுமதியில்லாமல் நீ போக முடியாது என்று ரஜினி சொல்கிறார். அதை மீறி அவர் போக முயற்சிக்க, மொத்த பாதையையும் அடைத்து விடுகிறார்கள். அவர் ரஜினியிடம் வந்து அனுமதி கேட்ட பின்னரே, வழி கிடைக்கிறது. இந்த காட்சியில் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைக்கிறது. முன்னாள் காதலியைத் தனியாக சந்திக்க செல்லும் போது, ரவுடிகள் அவரை சுற்றி வளைக்கும் காட்சி. தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றவனை கொன்றதுக்கு பழிக்கு பழி வாங்கும் காட்சிகள் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல தீனி. அதே போல காவல் நிலையத்தில் அவர் செய்யும் கலாட்டா கலக்கல். மனைவி மகனை இழந்த பின்னரும், நானா படேகர் வீட்டுக்கு தனியாக சென்று சவால் விடும் காட்சியும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் காதலியுடனான சந்திப்பு, பழைய நிகழ்வுகள், மனைவியின் அன்பு, பாசம் என குடும்ப நாடகமாக பா.ரஞ்சித் முத்திரை பதிக்கிறார். இரண்டாம் பாதியில் சவால், பழிவாங்குதல் என ரஜினியின் படமாக நகர்கிறது. காலாவில், வில்லனை ராமனாகவும், ரஜினியை ராவணனாகவும் காட்டி ராவணனே ஜெயிச்சதாக காட்டுகிறார் ரஞ்சித். அதோடு உச்சகட்டக் காட்சியில் தாமிரபரணி சம்பவம், வாச்சாத்தி சம்பவம், சல்லிக்கட்டு, ஸ்டெர்லைட்டில் போராட்டக்காரர்கள் நடுவே சமூக விரோதிகள் ஊடுருவிய காட்சிகள் என படம் பண்ணியதை வைத்துதான் தூத்துக்குடியில் ரஜினி அப்படி பேசினார் போல! (ஸ்டெர்லைட் மக்கள் அறப்போராட்டத்தில், உண்மையில் என்ன நடந்தது? காவல்துறையினரின் திட்டமிட்ட சதி, அதிகாரிகள் சதிவலையில் இருந்து தற்காத்துக் கொள்ள போட்ட திட்டம், எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது ரஜினி!) படத்தில் குடும்பத்தினருடன் ரஜினி அதிகம் செலவிடும் காட்சிகள் அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் அதுவே படம் மெல்ல நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. படம் நல்லா வந்திருக்கிறது. ரஜினியும் நல்லா வரவேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



