Show all

நிலாவண்டி நிலாவில் இறங்காதது சிறுசறுக்கல்! சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கியது வரை, நேரானவெற்றியே.

நிலவின் தென் துருவப்பகுதியில் இந்திய விண்வெளித்துறை அறிஞர்கள் படைக்கவிருந்த புதிய வரலாறு கடைசிநேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் கைநழுவிப் போனது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 புள்ளி ஒரு கிலோ மீட்டர் வரை நெருங்கிய, நிலாவண்டி நிலாவில் இறங்காதது சிறுசறுக்கல்!

21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் செலுத்திய சந்திரயான்-1 விண்கலம், நிலவின் தென் துருவ பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளை முதல் முறையாக கண்டறிந்தது. 

இதையடுத்து நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்வதற்காக சந்திரயான் 2 திட்டம் உருவாக்கப்பட்டது. நிலவின் தென் துருவப் பகுதியில் ஒரு நிலா வண்டியை ஊர்ந்துபோகச் செய்து ஆய்வு நடத்த சந்திரயான்-2 திட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் முதல் முறையாக நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்க வேண்டும் என்கிற கனவுடன் 06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (22.07.2019) அன்று புவியிலிருந்து புறப்பட்டது சந்திரயான் 2 விண்கலம். அரிக்கோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 தனது அடுத்தக்கட்ட சுற்றுவட்டப்பாதை நகர்வுகளைக் கடந்து, 03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (20.08.2019) நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது. கடந்த திங்கட் கிழமை சந்திரயான்2 வின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த நிலாவண்டியை வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கச் செய்யும் இறுதிக்கட்ட முயற்சிகளில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் தீவிரமாக மூழ்கியிருந்தனர். 

இன்று அதிகாலை 1.53 மணிக்கு நிலவில் இயங்குவதற்கான வண்டி நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வரலாற்று நிகழ்வை நேரடியாகக் காண இந்திய விண்வெளி ஆய்வுக்கழக கட்டுப்பாட்டு மையத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

திட்டமிட்டபடி எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 புள்ளி 1 கிலோ மீட்டர் தொலைவில் நிலவில் இயங்குவதற்கான வண்டி, நிலவை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, அதிலிருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு சைகை வரவில்லை. இதனால் விண்வெளித்துறை அறிஞர்களிடையே உற்சாகம் குறைந்து கட்டுப்பாட்டு மையத்தில் அமைதி நிலவியது. சிறிது நேரம் சக விண்வெளித்துறை அறிஞர்களிடையே ஆலோசனை நடத்திய இந்திய விண்வெளி ஆய்வுக் கழக தலைவர் சிவன், நிலவில் இயங்குவதற்கான வண்டியை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கச் செய்யும் முயற்சி திட்டமிட்டபடி நிறைவேறவில்லை என்று கூறினார். 

நிலவில் இயங்குவதற்கான வண்டி, நிலாத்தரையில், இறங்குவது திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்றாலும், சந்திரயான்-2 திட்டம் தோல்வியில் முடிந்து விட்டதாகக் கூற முடியாது. சந்திரயான் 2 விண்கலத்தின் நிலவில் இயங்குவதற்கான வண்டி நிலவில் தரையிறங்காமல் விட்ட போதும், சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கியது வரை எதிர்பார்த்தபடியே நிறைவேறியது. இந்திய விண்வெளித்துறை அறிஞர்கள் அடுத்த முறை முழுமையாக வெல்லட்டும் என்று வாழ்த்துவோம்.

விண்வெளித்துறையின் இந்த தற்காலிக சறுக்கலுக்கெல்லாம்; இந்தியவை ஆளும் பொறுப்பில் இருக்கிற பாஜகவை குறைசொல்;லும் முயற்சியில் களமிறங்கி விடக்கூடாது. பணமதிப்பிழப்பு தொடங்கி, இன்றைய போக்குவரத்து துறை சட்டத்திருத்தம் வரை பாஜகவின் அனைத்து முயற்சிகளும் நாட்டை பின்னுக்குத் தள்ளும் முன்னெடுப்புகளே! இந்திய மக்களின் கவனம் அதிலிருந்து விலகிவிட்டால், இரண்டு ஆட்சிபணித்துறை அதிகாரிகள், மற்றும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஆளுநர் துணை ஆளுநர் விலகல் போன்று ஏராளமான தோல்விகளை நமது நாடு பாஜக ஆட்சியில் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால் இந்திய மக்களுக்கு கடமைகள் நிறைய இருக்கின்றன. விண்வெளித்துறை அறிஞர்களின் இதுவரையிலான வெற்றிகளைப் பாராட்டி, சறுக்கலை கடந்து செல்வோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,268.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.