Show all

இ.கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை! திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற்றிட.

மக்களாட்சி விரோத செயலுக்கு கிருஷ்ணனை மதவாத சக்திகள் பயன்படுத்துவதை கி.வீரமணி மீதான வழக்கு வெளிப்படுத்துகிறது. கருத்துரிமை பறிக்கப் படுவதை மக்களாட்சி சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெறவேண்டும் என்று இ.கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற இ.கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணர் குறித்து இடம்பெறும் புராணக் கருத்துக்களின் மீதான திராவிர்கழகத் தலைவர் வீரமணி அவர்களின் திறனாய்வால் தான் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக, நெல்லை அறங்கூற்றுத்துறை நடுவர் மன்றம் 4-ல், சிறிராதா தாமோதர் வழிபாட்டு மையத்தின் தலைவர் திரு சிதாபதி என்பவர், கி.வீரமணி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என  மனு பதிகை செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுத்துறை நடுவர் சிதாபதியின் முறையீட்டில் உண்மையிருந்தால், கி.வீரமணி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தச்சநல்லூர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தச்சநல்லூர் காவல் துறையினர் கி.வீரமணி மீது 6 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திராவிடர் கழகம் பகுத்தறிவுப் பரப்புரை செய்து வருவதை அனைவரும் அறிவர். மூடப் பழக்க வழக்கங்கள் மண்டிக்கிடப்பதற்கு புராணக் கற்பனைக் கதைகளே காரணம் என்பதை விஞ்ஞான ஆதாரத்தோடு பரப்புரை செய்து வருகின்றனர். கிருஷ்ணனின் லீலைகள் குறித்து பல தகவல்கள் உள்ளன. அவர் வீடுவீடாக வெண்ணெய் திருடி தின்பார் என்றும், ஆறுகளில் குளிக்கச் செல்லும் இளம் பெண்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்களை கிண்டல் செய்து, ஏளனப்படுத்தி, ஆபாசமாக அவமதித்து, அதில் ஆனந்தம் கொள்வார் என்றும் பல கதைகள் உள்ளன. இது போன்ற கற்பனைக் கதைகளை சிருங்காரரசம் சொட்ட, பக்தர்கள் பரப்புரை செய்யும் போது இளைய தலைமுறையினர் சீரழிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதனை விமர்சன ரீதியாக எடுத்துக் கூற அரசியல் அமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியுள்ளது.

இந்த விபரங்களை தச்சநல்லூர் காவல்துறை  கருத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? கருத்துரிமையை பறிக்கும் மக்களாட்சி விரோத செயலுக்கு கிருஷ்ணனை மதவாத சக்திகள் பயன்படுத்துவதை கி.வீரமணி மீதான வழக்கு வெளிப்படுத்துகிறது. கருத்துரிமை பறிக்கப் படுவதை மக்களாட்சி சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு, நெல்லை அறங்கூற்றுத்துறை நடுவர் மன்றத்திற்கு உரிய விளக்கம் அளித்து, திராவிடர் கழக தலைவர் திருமிகு கி.வீரமணி மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ் சொலவடை. அரசின் சட்டம் மக்களுக்கானது. தெய்வத்தின் சட்டம் மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் சேர்த்துதான். தெய்வத்தைக் காப்பாற்றும் வேலைக்கு அரசை அழைப்பது நியாயமில்லை; மக்களைக் காப்பாற்றும் தெய்வத்தை காப்பாற்ற, அரசை நாடி தெய்வத்தை இழிவு செய்வது அபத்தமானது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,276.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.