Show all

சாதிநோயிலிருந்து விடுபடாத வடஇந்தியக் கிராமங்கள்! கலப்பு திருமணம் புரிந்த பெண்ணை, மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைப் போல திராவிட இயக்கங்களோ, கேரளத்தைப் போல பொதுவுடைமை கட்சியோ நாட்டைக் கைப்பற்றாமல், இன்னமும் காங்கிரஸ் பாஜக பிடியில், மனித நேயமோ, நாகரீகமோ இல்லாமல், வட இந்தியக் கிராமங்கள், சாதிநோயில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றன.

பீகார் மாநிலம் நவடா மாவட்டம், ராஜவுளி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்தார். இருவரின் காதல் விவகாரமும் வீட்டுக்கு தெரியவர, பெண்ணை கண்டித்ததுடன், வீட்டிலேயே அறைக்குள் தள்ளி சிறை வைத்தனர். 

ஆனால் அந்த பெண்ணோ இளைஞரின் மீதுள்ள காதல் காரணமாக, கடந்த கிழமை வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். நேராக அந்த இளைஞனைச் சந்தித்து, இப்படியே விட்டால் நம்மை பிரித்து விடுவார்கள் என்று சொல்லி அழுதிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து முடிவெடுத்து திருமணமும் செய்து கொண்டனர். 

இதனிடையே வீட்டில் பெண் இல்லாததால் குடும்பத்தினர் ஊர் முழுக்க தேடி, கொஞ்ச நேரத்திலேயே இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டனர். இப்போது பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகிவிட்டது. பெண்ணை தரதரவென சாலையில் இழுத்துக் கொண்டே வந்தனர். ஊர்நடுவே வைத்து கிராம பஞ்சாயத்தை கூட்டினர். ஊர் பெரியவர்கள் ஓடி வந்தார்கள். அப்போது பெத்த பெண்ணை பற்றி பெற்றோரே, ஊர்க்காரர்களிடம் புகார் செய்தனர். உடனே பெரிசுகள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். அதாவது அந்தப் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை கேட்ட பெண்ணின் பெற்றோரும் சரி என்றனர். அடுத்ததாக பெண்ணை ஊர் மத்தியில் உள்ள மரத்தில் கட்டினார்கள். பின்னர் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். 
முரட்டு மனிதர்களின் சவுக்கு அடியை அந்தப் பெண்ணால் தாங்கவே முடியவில்லை. கதறினாள்... துடித்தாள்... மகள் துடிப்பதை பெற்றோர் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்சியை ஒருவர் காணெளி எடுத்து அதனை இணையத்திலும் பதிவிட்டு விட்டார். இதுபற்றி அந்தப் பெண்ணின் அப்பாவிடம் கேட்கப்பட்டதற்கு, பெண் எங்கள் சாதிக்காரரனைதான் கல்யாணம் செய்துக்கணும், இன்னொரு சாதிக்காரனை விரும்பினதுக்குத்தான் இந்த அடி என்கிறார் கொஞ்சம் கூட பெற்ற மகள் என்கிற பாசம் பற்றுதல் இல்லாமல். பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எதிர்வினை ஏதும் இன்னும் வெளியாக வில்லை

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,933.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.