Show all

உச்ச அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை! புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக

உச்ச அறங்கூற்றுமன்றம் தாமக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்த நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் நல்லதொரு நெருக்குதலை தரும் என்று சமூக ஆர்வலர்கள் பேசி மகிழ்ந்தனர் 

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக, உச்ச அறங்கூற்றுமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. 

இந்த விசாரணையின் போது, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த உச்;சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், இதுகுறித்து நடுவண், மாநில அரசுகள் அறிக்கை பதிகை செய்ய உத்தரவிட்டனர்.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ 40 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பது இந்த கொரோனா ஊரடங்கால் வெளியுலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தை அடுத்து அதிக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழகமே வாழ்வளித்து வருகிறது. 

அவர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப, நடுவண் அரசு சிறப்பு தொடர்வண்டிகளை இயக்காத நிலையிலும், பேருந்துகளில் அனுப்ப மற்ற மாநிலங்களின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையிலும், தமிழகத்திலேயே தங்க வைத்து சிறப்பாக பேணி வந்தது தமிழக அரசு. ஆனாலும் வேலைக்கு அமர்த்தியவர்கள் சம்பளம் வழங்காத நிலையில் அவர்களை சொந்த மண்ணுக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக அமைந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் இருந்து இதுவரை 2,28,000 தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அறிக்கை பதிகை செய்தது. மேலும் சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு அன்றாடம் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், 3,17,000 பேருக்கு குடும்ப அட்டையில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உச்ச அறங்கூற்றுமன்றம் தாமக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்த நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் நல்லதொரு நெருக்குதலை தரும் என்று சமூக ஆர்வலர்கள் பேசி மகிழ்ந்தனர் 

இதனைத் தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான தொடர்வண்டி கட்டண செலவை  மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் மாநிலங்களே அவர்களுக்கான உணவு, நீர் மற்றும் இருப்பிடத்திற்கான தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.