ஒட்டுமொத்த உதகை நகரமே விளம்பரத்திற்காக இந்த வழக்கைக் கையில் எடுத்ததாக பகடி செய்யும்போது அதன் பின் உள்ள உண்மைகளை எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் வழக்கறிஞர் வெண்பா என்பதே 'பொன்மகள் வந்தாள்” படத்தின் திரைக்கதை. 16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஜோதி ஒரு கொடூர மனநோயாளிக் குற்றவாளி. அவர் உதகையில் 10 அகவைக் குழந்தையை துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்தக் கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்று காவல்துறையினர் செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் வெண்பா (ஜோதிகா). அப்பா பெட்டிஷன் பெத்துராஜ் (பாக்யராஜ்) ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவருக்கு உதவுகிறார். குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு கொலைகாரிக்கு வக்காலத்து வாங்குவதா என்று பொதுமக்கள் கொந்தளித்து ஜோதிகாவை அவமானப்படுத்துகின்றனர். மண்ணை வாரித் தூற்றி சாபமிடுதல், செருப்பு வீசுதல் என்று பல்வேறு அவமானங்களுக்கு ஜோதிகா உள்ளாக்கப்படுகிறார். இந்த அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார், அதுவும் வழக்கறிஞராக அவர் வாதாடும் முதல் வழக்கு இதுதான். ஒட்டுமொத்த உதகை நகரமே விளம்பரத்திற்காக இந்த வழக்கைக் கையில் எடுத்ததாக பகடி செய்யும்போது அதன் பின் உள்ள உண்மைகளை எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் வழக்கறிஞர் வெண்பா என்பதே 'பொன்மகள் வந்தாள்” படத்தின் திரைக்கதை. 36 வயதினிலே படத்தின் மூலம் மறுவருகை நிகழ்த்திய ஜோதிகா, அதற்குப் பிறகு ஆறேழு படங்களில் நடித்திருந்தாலும் 'பொன்மகள் வந்தாள்” படத்தின் மூலம் மறுவருகைக்கான பொருள் முழுமை அடைந்துள்ளது இன்று ஒற்றை நாளில் பேச்சு பரவலாகியிருக்கிறது. பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் ஆளுமை செலுத்தியுள்ளனர். தன் வழக்கமான குணநலன்களுடன் கூடிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். பார்த்திபன் அறங்கூற்றுமன்றத்தில் கலாய்க்கும்போது தன் ஆசிரியரை விஞ்சுகிறார் பார்த்திபன். ராஜரத்னம் சார் என்று மரியாதையுடன் பார்த்திபனை அழைக்கும் பிரதாப் கே.போத்தன் பின்பு அவரை அடக்கும் விதத்தில் அசாத்திய கம்பீரத்தைக் காட்டுகிறார். பாண்டியராஜனுக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. ஆனாலும், அறங்கூற்றுவரை இடித்துரைக்கும் காட்சியில் நியாயத்தின் தராசாக நிற்கிறார். வழக்கமான கதாபாத்திரம் என்றாலும் வில்லத்தனத்தில் குறையில்லாமல் மிரட்டியுள்ளார் தியாகராஜன். குழந்தையைப் பறிகொடுத்த துக்கத்தில் ஓலமிடும் செம்மலர் அன்னத்தின் அழுகை இதயத்தில் ஈரம் கசியச் செய்கிறது. எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் உதவியாளராக இருந்தாலும் நியாயத்தின் பக்கம் பேசும் விஜே ஆசிக்கின் நடிப்பு கவர்கிறது. சுப்பு பஞ்சு, வினோதினி வைத்தியநாதன், அக்சரா கிசோர், வித்யா பிரதீப், கிரேன் மனோகர், கஜராஜ் என யாருடைய நடிப்பும் சோடை போகவில்லை. அவர்கள் அனைவரும் பொருத்தமான பாத்திர வார்ப்புகளாக மிளிர்ந்தனர்.ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த வசந்தாவின் இசையும் பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. யாரை இந்த உலகம் தேவதையா பார்த்திருக்கணுமோ அவங்களை சைக்கோவா மாத்தி உங்களை எல்லாம் நம்ப வெச்சிருக்காங்க, பசிக்காக ஒரு கை அரிசியைத் திருடுனவன்னை அடிச்சுக் கொன்ன இதே நாட்டுலதான் 100 பேரை பலாத்காரம் பண்ணவங்க, அதை காணொளி எடுத்தவங்கள்லாம் சொகுசா வெளியே சுத்திக்கிட்டு இருக்காங்க, நாங்க தோத்துட்டோம்னு சொல்றதுக்கு இது விiளாட்டு இல்லை யுவர் ஹானர். போன்ற வசனங்களை எழுதி கதைக் களத்துக்கு வலுவூட்டிய லஷ்மி சரவணகுமார், ஜேஜே ப்ரட்ரிக், முருகேஷன் பொன் பார்த்திபன் ஆகியோர் பாராட்டு பெறுகின்றனர். குறைகள் என்று பார்த்தால் சொல்லுவதற்கு சில பல இருக்கின்றன. உங்கள் கோணத்தில் அது வெளிப்படுகிறதா என்று எண்ணிம திரையில் பாருங்கள். குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதையால் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை மையமாகக் கொண்டு வந்த சில தமிழ்ப் படங்களில் 'பொன்மகள் வந்தாள்” தனித்து நிற்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



