நீட் தேர்வு வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் அழுத்தம் என்பதாகக் காட்டும் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருக்கிறது நடுவண் பாஜ அரசு. நீட் தேர்வே வேண்டாம். நடத்தித் தொலைப்பது என்றால், நீட் தேர்வை இழுத்தடிக்க வேண்டாம் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின் கவலை! 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள்- பனிரெண்டாம் வகுப்பில் கணக்கு, பரியியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை எண் வழங்கப்படுகிறது. தரவரிசை அடிப்படையில் மாணவர்களுக்கு அவரவர்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த எளிமையான முறை நீண்ட காலமாக சிக்கல் இல்லாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. நடுவண் அரசின் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் கூட்டு நுழைவுத் தேர்வு (ஜெஇஇ) மூலமாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தக் கல்லூரிகளுக்கு இடையே, கல்வித் தரத்திலோ கட்டணத்திலோ பெரிய ஏற்றதாழ்வு இருக்காது. சொந்த ஊருக்கு அருகாமையில், தொலைவில் என்பது மட்டுமே மாறுபடும். மேல்தட்டு மக்கள் மட்டுமே மோதுவார்கள். இலக்கு வைத்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைத்துவிடும். கீழ்த்தட்டு மாணவர்கள் களத்திற்கே வரமாட்டார்கள். ஆனால் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே உச்சபட்ச ஏற்றதாழ்வுகள் உள்ளன. கட்டணம் மிகமிகக் குறைந்த அரசு கல்லூரிகள், மிக அதிகமான கட்டணம்- அனுபவம் நிறைந்த கல்லூரிகள், கட்டணத்தில் ஏதும் சமரசம் செய்து கொள்ளாத அண்மையில் தொடங்கப்பட்ட அனுபவம் இல்லாத கல்லூரிகள் என மூவகையான கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளை மிக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அரசு கல்லூரிகள் ஏழை மாணவர்கள் தங்கள் குடும்பத்தை தூக்கி நிறுத்துவதற்கு வாய்ப்பு வழங்கும் கோயிலாகவே பலகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. பணக்காரப் பெற்றோர்கள் மிக அதிகமான கட்டணம் அனுபவம் நிறைந்த கல்லூரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விடுவார்கள். பொருளாதார வசதியும் மதிப்பெண்ணும் குறைந்த மாணவர்கள் நாங்களும் பொறியியல் கல்வி பெறுகிறோம் என்று- கட்டணத்தில் ஏதும் சமரசம் செய்து கொள்ளாத அண்மையில் தொடங்கப்பட்ட அனுபவம் இல்லாத கல்லூரிகளில் சேர்ந்து மாணவர்களும் பெற்றோர்களும் போராடுவார்கள். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, நடுவண் பாஜக அரசு நீட் என்கிற ஒரு தேர்வை திணிப்பதற்கு முன்பு வரை பொறியியல் கல்லூpகளுக்குப் பின்பற்றும் அதே முறையை சிக்கல் ஏதும் இல்லாத வகையில் ஏழைகளுக்கு கோயிலாகவும், பணக்காரர்களுக்கும் மருத்துவ வாய்ப்பாகவும் முன்னெடுக்கப் பட்டு வந்தன. நடுவண் பாஜக அரசின் நீட்டுக்குப்பிறகே அனிதா போன்ற ஏழைகளின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு மரணத்தில் முடிந்தது. இந்த அழகில்தாம் கொரோனாவோடே சமரசம் செய்து கொண்டு வாழ்வதைப் போலவே, நீட்டோடும் சமரசம் செய்து கொண்டு, இழுத்தடிக்காமல் நீட்டை நடத்தி முடித்தால் சரிதான் என்கிற மனநிலைக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் வந்து விட்டார்கள். எதிர்க்கட்சிகள் நீட் வேண்டாம் என்று போராடும் ஆனால் வெற்றி பெறாது என்று மக்கள் கருதுகிறார்கள். இதையே காரணமாக்கிக் கொண்டு- பெற்றோர் மற்றும் மாணவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத்தான் தொற்றுநோய்க்கு நடுவே பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புக்கான தேர்வை நடத்த முடிவெடுத்துள்ளதாக நடுவண் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்த மாணவர்களில் 80 விழுக்காட்டு பேர்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துவிட்டார்கள். இதையே- தேர்வை நடத்துமாறு மாணவர்களும், பெற்றோர்களும் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று காரணம் காட்டுகின்றனர். நீட் தேர்வு இல்லையென்று சொல்லுங்கள். அதை உடனே சொல்லுங்கள் என்பதுதாம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை என்பதை ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



