Show all

ஏழு பேர் கும்பல் கைது! நீட், ஜெஇஇ தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று பந்தயம் கட்டி, வசூலில் ஈடுபட்டார்களாம்

மருத்துவம், மற்றும் பொறியியில் கல்வியில் இணைய விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எதிர்காலம் நடுவண் பாஜக அரசுக்கும் இப்படியான சூதாடிகளுக்கெல்லாம் கேலிக் கூத்தாகியுள்ளதை எண்ணி பெற்றோர்கள் வருத்தத்தை இணையத்தில் பதிவு செய்து வருகின்றார்கள்.

13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம்; மற்றும் பொறியியல் கல்விக்கு மாணவர்களைத் தெரிவு செய்தல் என்கிற நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. 

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பு ஆண்டிலும் மதிப்பெண் அடிப்படையிலான தேர்வுமுறை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களைத் தட்டிப்பறித்து வடஇந்திய மாணவர்களுக்குத் தாரை வார்க்க நடுவண் பாஜக அரசு கண்டுபிடித்து அடாவடியாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிற உபாயம்தான் இந்த நீட் தேர்வு. 

கொரோனா உச்சகட்ட பாதிப்பு, மழை வெள்ளம், ஊரடங்கால் வருமானம் இழப்பு ஆகியவற்றோடு, தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உரிய வசதிகளோ, பாதுகாப்போ இல்லாத நிலையிலும் நீட் தேர்வை நடத்துவது என்று நடுவண் பாஜக அரசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவின் ஆறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு எதிராக உச்சஅறங்கூற்று மன்றத்தில் சீராய்வு மனுக்களை பதிவு செய்து உள்ளனர்.

அறங்கூற்று மன்றமே இயங்கலை வழியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அறங்கூற்றுமன்றம் எப்படி பல இலட்சம் மாணவர்களுக்கு எந்த வசதியும், பாதுகாப்பும் இல்லாத நிலையில், கொஞ்சம் கூட இயல்பே (இலாஜிக்) இல்லாமல், ‘தாங்களே இயங்கலையில்- பல இலட்சம் மாணவர்கள் நடுத்தெருவில்’ என்பதாக எப்படி தீர்ப்பளிக்கும் என்று பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர் ஒரு குழுவினர். எதிர் பந்தயத்தில் ஈடுபடும் மறு குழுவினரோ நடுவண் பாஜக அரசிடம் அப்படிப் பட்ட நியாயத்தை எப்போது பெற்றிருக்கிறோம்? எல்லாவற்றிலும் அடாவடிதானே உறுதியாக நீட் ஜேஇஇ தேர்வுகள் நடக்கும் என்று பந்தயத்தில் எதிரணியில் நிற்கின்றனர் மற்றொரு குழுவினர். 

இப்படியாக, உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்டி சூதாடிய 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் தொடர்பாக பந்தயம் கட்ட விருப்பம் உள்ளவர்களிடம், கருத்துப் பரப்புதலும் வசூலும் செய்து கொண்டிருப்பதாகக் கிடைத்த கமுக்கத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

கைதானவர்களிடம் இருந்து 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் பத்து செல்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.