13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப் பட்ட வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் குமாரசாமி நால்வரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். சசிகலா அவர்கள் தற்காலிகமாக பன்னீர் செல்வம் அவர்களைத் தற்காலிகமாக முதல்வர் ஆக்கினார். பிறகு அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி தான் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்ட நிலையில், தான் பதவியேற்றுக் கொள்ள ஆளுநரிடம் அனுமதி கேட்டிருந்தார். தீர்ப்பு தள்ளி வைக்கப் பட்டிருந்த நால்வர் மீதான வழக்கு முடுக்கி விடப் பட்டு, செயலலிதா மரணத்திற்கு இரு மாதங்களுக்குப் பின்பு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு மற்ற மூவருக்கும் நான்காண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உச்ச அறங்கூற்றுமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. மூவரும் சிறையில் அடைக்கப் பட்டனர். ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவருக்கு தண்டனை வழங்க முடியாது என்ற போதிலும், பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி அவரிடமிருந்து 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்க வேண்டியது உள்ளது, அதை எவ்வாறு வசூலிப்பது என்று கேட்டு கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு பதிகை செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை உச்ச அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மறுசீராய்வு மனுவை கர்நாடக அரசு பதிகை செய்திருந்தது. அந்த மனு நேற்று தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், மதன் பி லோக்கூர் ஆகிய அறங்கூற்றுவர்கள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே கூறியபடி செயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதால் அபராதம் வசூலிக்க தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்சஅறங்கூற்றுமன்றம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,925.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



