12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்ற, பாஜக தேசியச் செயலாளர் எச்.இராஜா, திட்டக்குடி கோயில் நிலத்தை, கடலூர் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டியதோடு மேலும், அருண்மொழித் தேவன் அவர்களை இராஜா ஒருமையில் பேசியதாகவும் காணொளி சமூகவலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், எச்.இராஜா மீது கடலூர் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் புகார் அளித்தார். இதன்பேரில், எச்.இராஜா மீது இருதரப்பினர் இடையே மோதலை உருவாக்குதல், சாதி-இன-மத கலவரத்தைத் தூண்டுதல், பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்பி, விரோதத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், சென்னை நடுவண் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, அறங்கூற்றுமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசியதாக அவர் மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழக அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இழிவாக பேசியதாக 8 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிமுக பாராளுமன்றஉறுப்பினர் புகாரின் பேரிலும் தற்போது எச்.இராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அருண் மொழித்தேவன் புகாரின் பேரில், அவர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சுழியம் குற்றவியல் காவல்துறையினரும், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,924.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



