அண்மையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில், குறளிச்செலாவணியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று முடிவுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டில் இந்தியாவின் குறளிச்செலாவணி வெளியிட இந்திய கட்டுப்பாட்டு வங்கி திட்டமிட்டு வருகிறது. 03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்றைய நிலையில், உலகில் குறளிச்செலாவணி (கிரிப்டோகரன்சி) தவிர்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அனைத்து நாடுகளும் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் இதே நிலை தான். அண்மையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில், குறளிச்செலாவணியைத் தடை செய்யக் கூடாது ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று முடிவுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் புதிய குறளிச்செலாவணியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, ஐரோப்பாவில் குறளிச்செலாவணிக்கான சோதனை ஓட்டம் நடந்து வரும் நிலையில் அமெரிக்கா, இந்தியா உட்படப் பல நாடுகள் இதற்கான முயற்சியில் களம் இறங்கியுள்ளன. இந்த குறளிச்செலாவணி மூலம் பணத்தை எண்ணிம முறையில் அனுப்ப முடியும், இதேபோல் யாரிடம் இந்தப் பணம் இருக்கிறது, எங்கெல்லாம் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் கண்காணிக்க முடியும். அனைத்திற்கும் மேலாக மக்கள் இந்த குறளிச்செலாவணியை இணைய இணைப்பு இல்லாமலே பரிமாற்றம் செய்யப்படும் சேவைகளும் உலக நாடுகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய குறளிச்செலாவணிகள் கருப்புப் பணம் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு பெரிய அளவில் உதவும், கருப்புப் பணத்தை ஒழிக்க என்று முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு கருப்புப் பணம் குறையாத காரணத்தால் படுபடு தோல்வி அடைந்தாக நையாண்டி செய்யப்பட்டு வருகிறது. கருப்புப்பண ஒழிப்பிற்கு குறளிச்செலாவணி உதவும் என நம்பப்படுகிறது. இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்வுப் பிரிவின் தலைமை நிர்வாகத் தலைவர் பி.வாசுதேவன் கூறுகையில், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் குறளிச்செலாவணிக்கான சோதனை ஓட்டம் தொடங்கும் என்றும், இந்தியாவின் குறளிச்செலாவணி அறிமுகத்திற்கு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி இந்திய ரூபாய் மதிப்பிலான குறளிச்செலாவணியை அடுத்த மாதமே அறிமுகம் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டு வரையில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும் கட்டுப்பாட்டு வங்கி தற்போது குறளிச்செலாவணியை அறிமுகம் செய்வதிலும், பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதிலும் இருக்கும் சிக்கல்களை ஆய்வு செய்து வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,072.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.