ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு, வரவேற்பும், திறனாய்வும் இன்றைய தலைப்பாகி வருகிறது. 03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மூன்று அடாவடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது ஒன்றிய பாஜக அரசின் பின்னடைவை பறைசாற்றுவதாகிறது. அனால் இந்தப் பின்னடைவு இந்திய மக்களுக்கு நல்லது. ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதற்கு, வரவேற்பும், திறனாய்வும் இன்றைய தலைப்பாகி வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுகவினர் ஆதரித்தனர். அதிமுக கூட்டணிக்கட்சிகளும் ஆதரித்தன. இந்த திருப்பம் இவர்களுக்கு மாபெரும் தலைகுனிவு. மறுபுறம் திமுக, அதன் தோழமைக்கட்சிகள் ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்த மூன்று அடாவடி வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்தன. அவர்களுக்கு இது வெற்றி மட்டும் அல்லளூ தொடர் வெற்றிக்கான வழித்தடம். 442 நாட்களுக்கு முன்பு இந்த மூன்று வேளாண்சட்ட முன்வரைவுகளை ஒன்றிய பாஜக அரசு அதிரடியாக, அடாவடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளின் குரலையும் கேட்காமல், மக்கள் அறியாமல் கொடுத்துவிட்ட பெரும்பான்மை காரணமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் உடனடியாக குடிஅரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமானது. அந்தச் சட்டங்களை அடியோடு அகற்றக் கோரி வேளாண் பெருமக்கள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாகவும், உழவர்களிடம் இச்சட்டங்களை புரியவைக்கும் (திணிக்கும்) முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், தான் மன்னிப்பு கேட்பதாகவும் தலைமைஅமைச்சர் மோடி மூலம் அறிவிக்;கப்பட்டு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளது ஒன்றிய பாஜக அரசு. நாடாளுமன்றத்தில் யார் யார் இந்தச் சட்டத்திற்கு ஆதராவாக அல்லது எதிராக நிற்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்தது. அன்புமணிராமதாஸ் அன்று அணியமாக வாக்களித்தபோது, நாடாளுமன்றத்துக்கே போகாதவர் இதற்கு மட்டும் அணியமாகி வாக்களித்தது ஏன் தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வேளாண் பெருமக்களின் இடைவிடாத போராட்டத்தால் கொடுங்கோன்மை மோடி அரசு அடிபணிந்தது என்று, நாம்தமிழர் கட்சியின் சார்பாக சீமான் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். அதிமுகவின் ஒரே மக்களவை பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அதிமுகவின் சார்பாக ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்த ஒற்றை மாமனிதர். மூன்று வேளாண் சட்டங்களை திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் எதிர்த்து தமிழ்நாட்டில் கடும் போராட்டங்கள் நடத்தின, சென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உழவர்களுக்கு ஆதரவான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உண்ணாநிலை போராட்டம் நடந்தது. அதில் பேசிய ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, ஒன்றிய பா.ஜ.க அரசின் வேளாண்மை விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்து, உழவர்களின் நலன் குறித்து கொஞ்சம்கூட இரக்கமின்றி நடந்துகொண்டிருக்கிறது. இனியொரு முறை மேடைகளில் நின்று நான் ஒரு உழவன் என்று மட்டும் சொல்லாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன் என்று விமர்சித்திருந்தார். ஆட்சிக்கு வந்தபின்னரும் திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் 3 வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தன. திமுக தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஏன் எதிர்த்து தீர்மானம் போடவில்லை. நீங்கள் செய்ய முடியாததை நாங்கள் செய்து தருகிறோம், எங்களுக்கு ஆதரவு தாருங்கள். டெல்லிக்கு சென்று வலியுறுத்தியும் எந்த பதிலும் வரவில்லை, எனவேதான் திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்தி, பணிவோடு கேட்கிறேன் ஆதரவு தாருங்கள் என்று பேசினார். இந்த தமிழ்நாடு அரசு தீர்மானத்தின் மீது அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தாலும் வேளாண் சட்ட முன்வரைவை ஆதரித்து மாநிலங்கவையில் வாக்களித்த பாமக இம்முறை தனது நிலையை மாற்றி தீர்மானத்துக்கு ஆதரவை அளித்து அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'உழவர்கள் நடுவே வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே தீர்மானத்தை ஆதரிக்கிறோம்' என பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி ஆதரவு தெரிவித்து பேசினார். தற்போது பாஜக திடீரென வேளாண் சட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்த நிலையில் தமிழகத்தில் வேளாண் சட்டங்களை ஆதரித்த ஒரே பெரிய கட்சி என்கிற அளவில் அதிமுக சங்கடப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உழவர்களுக்கு ஆண்டுதோறும் தனி நிதிநிலை அறிக்கை கேட்கும் பாமக தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் வேளாண் சட்டத்துக்கு எதிராக நின்று தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,072.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.