வினையே ஆடவர்க்கு உயிரே என்று பொருளீட்டலுக்காக பயணிக்கும், ஆடவரின் தொழில் வணிகம் குறித்து குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ பேசுவார். அந்த வகைக்கு- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து அறிந்து கொள்வதற்கானது இந்தக் கட்டுரை. 04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பொருளீட்டலுக்காக பயணிக்கும், ஆடவரின் தொழில் வணிகம் குறித்து குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ இப்படிப் பேசுவார்: இந்தக் குறுந்தொகைப் பாடலின் பொருள்: தொழில் தான் ஆண்மக்களுக்கு உயிர் ஆகும். ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனையுறை மகளிர்க்கு கணவன்மாரே உயிர் ஆவரென்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே. அழாதேளூ திரும்பி வருவார். என்று பொருள் தேடிப் பயணித்த தலைவர் வருகை குறித்து தலைவியை தேற்றுகிறார் தோழி. இன்றைக்குத் தொழில் வணிகம் என்பது அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் சொத்தாகி விட்ட நிலையில் நாம், வினையே ஆடவர்க்கு உயிரே என்ற வகைக்கு, பதினெட்டு அகவை தாண்டியதும் வேலை தேடுகிறோம். வேலை தேடுவோர்கள் அறிய வேண்டிய தகவல் வரிசையில்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து அறிந்து கொள்வதற்கானது இந்தக் கட்டுரை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழ்நாட்டு அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும். இந்தியா விடுதலை பெறுவதற்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது. சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என மாற்றம் பெற்ற பிறகு சென்னை தேர்வாணையம் என்ற தலைப்பு, தானாகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்று மாறிவிட்டது. தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப் பெற்ற இத் தேர்வாணையம் ஒரு தலைவர், மற்றும் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்களைக் கொண்டு செயல்படுகிறது. இவர்களின் பணிவிதிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒழுங்குமுறை சட்டம்,1954 கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. தேர்வாணையம் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதன் விவரங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 320-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது போல் தமிழ்நாட்டு அளவில் இது செயல்படுகிறது. அரசு அலுவலகங்களில் உதவியாளர் முதல் வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இது போன்ற முதன்மைப் பணிகளுக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யும் பணிகளைச் செய்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு முனைவர் கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 62 அகவை நிறைவுறும் வரை இப்பதவியில் இருக்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகிறது. பத்தாம் வகுப்பு முடித்து பதினெட்டு அகவை நிறைந்தவர்கள் அரசுப்பணி கிடைக்கும் வரை இந்தத்; தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தொடர்ந்து எழுதலாம். திமுக ஆட்சி காலத்திற்கு முன்புவரை பார்ப்பனியர்களே இந்த வகை அரசுப்பணிக்குத் தகுதியானவர்கள் என்பதான மாயை தமிழ்நாட்டில் இருந்து வந்தது. தற்போது அனைத்து தமிழ் மக்களும் இந்தவகை வேலைவாய்ப்புக்கு பெருவாரியாக ஈடுபட்டு வாகை சூடி வருகின்றனர். தொழில் வணிகத்தை விட வேலைவாய்ப்பு இடர் குறைந்தது என்று, அந்த வகைக்கு தம்பிள்ளைகளை அணியப்படுத்தும் தமிழ்ப்பெற்றோர்கள்- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் உங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வாகை சூட்டுங்கள்.
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅ றோழி யழுங்குவர் செலவே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,073.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.