டெல்லியில் போராட்டத்தில் கலவரம்! இன்னும் தொடர்கிறது. கலவரத்திற்கான அடிப்படை மாறுபட்ட புதிய முன்னெடுப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் போராட்டக் கலவரத்திற்காக புதிய வரலாறாக எழுதப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெல்லியில் சாகின்பாக் பகுதியில் பல நாட்களாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மஜ்பூர், ஜாப்ராபாத், யமுனா விகார் போன்ற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். அமைதியான முறையில் சனிக்கிழமை அன்று இந்தப் பகுதிகளில் பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடந்த பேரணிகளில்- குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் என்ற ஒரு கும்பல் புகுந்ததுதான் வன்முறை வெடிப்பிற்கான காரணம். போராட்டக்காரர்களில் சிலரும் திருப்பித் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. ஜாப்ராபாத் பகுதியிலுள்ள வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர். இந்த வன்முறைகளில் காவலர் ஒருவர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வன்முறையைத் தொடர்ந்து மஜ்பூர், ஜாப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அகமதாபாத்திலிருந்து டெல்லிக்கு வந்துள்ள நிலையில் அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போராட்டங்களுக்கு நடுவில், ஜாப்ராபாத் பகுதியில் வன்முறைகளில் வீசப்பட்ட கற்கள் நிறைந்த சாலையின் நடுவில் நின்றபடி சிகப்பு சட்டையணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காவல்துறை அதிகாரியை நோக்கி கையை உயர்த்தி பின்னோக்கிச் செல்லுமாறு மிரட்டுகிறார். பின்னர், கைகளை உயர்த்தி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த கட்டடத்திலிருந்து ஒருவர் செல்பேசி வழியாகப் படம்பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த காணொளி தற்போது தீயாகி வருகிறது. குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், மர்ம நபர்கள் தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்து அச்சுறுத்திச் செல்லும் நிகழ்வு புதிய நடைமுறையாக சமூகத்தில் அதிகமான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போராளிகளே வன்முறையில் ஈடுபடுவதும், போராட்டத்தில் காவல்துறையினர் அடக்குமுறையை முன்னெடுத்து சில நேரங்களில் வன்முறை வெடிப்பதும்தாம் இந்தியாவில் இதுவரையிலான போராட்டத்திற்கான வரலாறு. ஆனால்- டெல்லியில் போராட்டத்தில் கலவரம் இன்னும் தொடர்கிறது. கலவரத்திற்கான அடிப்படை மாறுபட்ட புதிய முன்னெடுப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் போராட்டக் கலவரத்திற்காக புதிய வரலாறாக எழுதப்படும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



