உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா அவர்கள் ‘வேண்டாம் வெறுப்பு அரசியல்’ என்பதை ஓர் ஒப்பற்ற ஆற்றுப்படை இலக்கியமாகவே முன்னெடுத்திருக்கிறார். எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான மக்களாட்சிப் போக்கை தடுத்து விடும். எனவே அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று தெளிவு படுத்துகிறார். 13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பழந்தமிழரின் மிகத் தொன்மையான இலக்கியங்களை- பதினென் மேல்கணக்கு நூல்கள் என்று பட்டியல் இட்டு தமிழ் இலக்கியத்துறை வழங்கி வருகிறது. அதில் எட்டுத் தொகை நூல்கள் எட்டும், பத்துப்பாட்டு நூல்கள் பத்தும் ஆகும். பத்து பாட்டு நூல்களில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் ஆகும். ஆற்றுபடை என்றால் தெளிவாக வழிகாட்டுதல் என்ற அடிப்படையில் அந்த ஆற்றுப்படை நூல்கள் அமைந்திருக்கும். அப்படியானதொரு ஆற்றுபடை இலக்கியமாக- நடுவண் பாஜக அரசுக்கு சிறந்த ஆட்சிக்கான வழிகாட்டுதல் செய்திகளை முன்வைக்கிறார் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா. எதிர்ப்பு கருத்துக்களை எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும். அதுவே நாட்டை நல்வழிப்படுத்த உதவும் என்றும் அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. என்றும் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா தெரிவித்துள்ளார். அண்மையில் நடுவண் பாஜக அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், அஸ்ஸாமில் அமலில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறை, மற்ற மாநிலங்களுக்கும் பரவலாம் என்ற அச்சத்தாலும் இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரைக் குத்தக்கூடாது என்றும், எந்த ஒரு கருத்துருவிலும் எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்றும், அது வன்முறையாக மாறாத வரை அதை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் அறங்கூற்றுவர் தீபக் குப்தா தெரிவித்துள்ளார். உச்ச அறங்கூற்றுமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக, மக்களாட்சியும் எதிர்ப்புணர்வும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடந்தது. இதில் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்:- தேர்தலில் ஒரு கட்சி 51விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளது என்றால் மீதமுள்ள 49விழுக்காட்டு மக்களும் அடுத்த ஐந்து ஆண்டு காலம் எதுவுமே பேசக் கூடாது என்று பொருள் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் மக்களாட்சியில் பங்கு இருக்கிறது அரசுகள் எப்போதுமே சரியாக இருப்பது இல்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம், எதிர்ப்புகள் வன்முறையாக மாறாத வரை அரசுகளுக்கு அதை தடுக்க உரிமையில்லை. கேள்வி எழுப்புவது உரிமை. ஒரு கருத்துருவில் நீங்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருப்பதால் நீங்கள் நாட்டை அவமரியாதை செய்வதாக பொருள் கிடையாது. மாறுபட்ட சிந்தனைகள் உதிக்கும்போது அங்கு எதிர்ப்புணர்வு நிச்சயம் உண்டாகும். கேள்வி எழுப்புவது என்பது மக்களாட்சியின் வழிவந்த உரிமையாகும். அமைதியான வழிகளை கடைபிடிக்கும் வரை எதிர்க்கட்சிகளுக்கு எப்போதுமே போராடுவதற்கு உரிமை உள்ளது. அண்மையில் அறங்கூற்றுவர் சந்திராசூட் உரை ஒன்றில் தெரிவித்ததைப் போன்று, ‘எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான மக்களாட்சியைத் தடுத்து விடும். எனவே அரசை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது. குடிமகன்களின் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் மக்களாட்சி வெற்றியடைந்ததாகக் கருத முடியும். கருத்து வேறுபாடு எதிர்கருத்துக்களுக்கு எப்போதும் முதன்மையான பங்கு உண்டு. அது ஊக்குவிக்கப்பட வேண்டும். நாட்டை வழிபடுத்துவதற்குத் தேவையான நல்ல வழிகளை கண்டடைய அது உதவும். இன்று நாட்டில், கருத்து வேறுபாடு தேச விரோதமாகத்; திணிக்கப்படுகிறது. அரசாங்கமும் நாடும் இரண்டு வெவ்வேறு கருத்;துருக்கள். சில கருத்துருக்கள் தேச விரோதமானவை என்பதால் அந்த முன்னெடுப்பில் அணியமாக முடியாது என்று கூறி வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவதை நான் காண்கிறேன். இது சரியல்ல. நீங்கள் சட்ட உதவியை மறுக்க முடியாது. வளர்ச்சி அடைய சில விதிகள் கேள்விக்குள்ளாகும் வரை ஒரு சமூகம் வளர்ச்சி அடையாது. அனைவரும் ஒரே கருத்துருவை, ஒரே பாதையை பின்பற்றிக்கொண்டிருந்தால் புதிய சிந்தனைகள் விரிவடையாது. காந்தி, காரல் மார்க்ஸ், முகமது நபி ஆகியோரை எடுத்துக்கொள்ளுங்கள் பழைய கருத்துருக்களுக்கு எதிராக இருந்தார்கள். இவ்வாறு நடுவண் பாஜக அரசுக்கான தனது ஆற்றுப்படையை முடித்திருந்தார் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



