மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர்
மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளராக
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேரனை பாஜக களம்
இறக்கியுள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தைப்
போன்று மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ள நிலையில் அக்கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும்
நோக்கத்துடன் பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
மரணம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அவரது ஆதரவாளர்களைக் கவர்ந்த பாஜக அரசு தற்போது
நேதாஜியின் பேரனை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறக்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்
தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதியில் அவருக்கு
எதிராக நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ் களம் இறக்கப்படுவார் என மனித வள மேம்பாட்டுத்துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு
வரும் நிலையில் அதனைச் சரிசெய்ய அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம்
என சந்திரகுமார் போஸ் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



