Show all

முதல் ஐம்பதில் ஒன்று சாத்தியமாக வில்லை! நடுவண் பாடத்திட்டத்தில் படித்த, தமிழக மாணவிக்குக் கூட. நீட் தேர்வு முடிவு.

நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 51.43 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காது. தரவரிசைப் பட்டியலில் முதல் ஐம்பதில் தமிழக மாணவ மாணவியர் ஒருவரும் இல்லை. நடுவண் பாடத்திட்டத்தில் படித்தவர்கூட.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில், முதல் ஐம்பது இடங்களில், தமிழக மாணவ, மாணவிகள் யாரும் இல்லை. தமிழக அரசு பாடத்திட்டம், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டம் என எதில் படித்த தமிழக மாணவ, மாணவியர்களும் தகுதி படுத்தப் படவில்லை. 

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 51.43 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப் பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 60.44 விழுக்காட்டினருக்கு தமிழக தேர்வாளர்களில் மருத்துவக் கல்வி மறுக்கப் பட்டிருந்தது. 

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92 விழுக்காட்டு பேர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 

மாநில அளவில் ராஜஸ்தான் மாணவர் முதலிடத்தையும், டெல்லி, உத்தரப்பிரதேச மாணவர்கள் இருவர் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் இந்தியாவின் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து பயிலமுடியம். அவர்கள் தங்கள் மாநில மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்யாமல் வேறு மாநிலத்தை தேர்வு செய்யும் நிலையில், அந்த மாநிலத்தின் முதலாம் மாணவரின் வாய்ப்பு பறிக்கப் படுகிறது. 

தமிழகத்தை பொருத்தவரையில் மொத்தம் 1.40 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர்களுக்கு தேர்ச்சி வழங்கப் பட்டுள்ளது. தேசிய அளவில் 57-ஆவது இடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நலின் கந்தேல்வால் 701 மதிப்பெண்கள், பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பதினாறு மதிப்பெண்களில் 56 இடங்கள் பின்னுக்கு தள்ளப் பட்டிருக்கிறார் தமிழக முதல் மாணவி. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.