பள்ளிக்கல்வி, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் பல்வேறு துறைகள். இவைதாம் தமிழகத்தின் கல்வி நிலைகள். பள்ளிக் கல்வியோடு ஐம்பது விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கின்றனர். மேல்நிலைக் கல்வியோடு முப்பது விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கின்றனர். மீதமுள்ள இருபது விழுக்காட்டினர்தாம் பட்டப் படிப்பில் பல்வேறு துறை படிப்புகளில், வென்றாலும், அதிலும் ஐந்து விழுக்காட்டினர் தாம் அந்த படிப்பு தரும் வாழ்க்கையை வென்றெடுக்கிறார்கள். மற்றவர்கள் படிப்போடு தொடர்பில்லாத வெற்றி, அல்லது பிழைப்பை கைக்கொள்கிறார்கள். இதில் ஆங்கிலம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அனுபவத்தைப் பார்ப்போம்! 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பல்வேறு பாடத் திட்டங்கள் செயல் பட்டாலும், சொந்தக் காலில் நிற்கிறவர்களை உருவாக்குவது என்னவோ தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்தாம். இந்தப் பாடத்திட்டத்தில் தாம் தமிழகத்தின் எண்பது விழுக்காட்டு பேர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் பத்தாம் வகுப்பு வரை 1.தமிழ், 2.சமூகவியல், 3.கணக்கு, 4.விஞ்ஞானம், 5.ஆங்கிலம், என்கிற பாடப்பகுதிகள் கற்பிக்கப் பட்டு வருகின்றன. 1.தாய்மொழியான தமிழ் மரபுக்கூறிலேயே பதிவாகி, ஐந்து அகவைக்குள் பல்லாயிரம் சொற்களைக் கற்றுக் கொண்டுதான் கல்விநிறுவனத்திற்குள் நுழைகின்றன ஒவ்வொரு குழந்தையும். 2.சமூகவியல்: இது குறித்தும் பள்ளிக்கு குழந்தை நுழையும் முன்பே அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், மாமா, அத்தை, தாத்தா, பாட்டி, அக்கம் பக்கம் உற்றார் உறவினர் என்கிற சமூக உறவுகள் குறித்த புரிதலோடுதான் இருக்கிறது. 3.கணக்கு: தாத்தா, பாட்டி வாங்கிக் கொடுத்த மிட்டாய்கள், பழங்கள் யார் யாருக்கு? எத்தனை மொத்தம்? என்கிற கணக்கின் எண்ணிக்கையெல்லாம் மொழியோடே பதிவாகும்; எண்ணும் எழுத்தும் தானே மொழி. 4.விஞ்ஞானம்: இதை பயில்வதில்தான் பள்ளியின் கட்டாயம் மாணவனுக்கு இருக்கிறது. 5.ஆங்கிலம்: இதற்கான தேவை எந்தக் குழந்தைக்கும் இல்லவேயில்லை. உலகினரின் சமூகம், உலகினரின் விஞ்ஞானம் இந்த ஒப்பீடு எப்போது தேவையோ அப்போதுதான் அடுத்த மொழி அல்லது ஆங்கிலத்தின் தேவை எழுகிறது. மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ முடியும்! மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது என்பது போலத்தான்- ஆங்கிலமோ பிறமொழிகளோ இல்லாமல் தமிழன் வாழ்ந்து விட முடியும். பிறமொழிகள் அதனின் வாழ்க்கையை வளமைப் படுத்திக் கொள்ள தமிழன் தேவையாக இருக்கிறான். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால்தான் பள்ளிக்கல்வி முடித்து மேல்நிலைக் கல்விக்கு தேர்ச்சி பெற்றவர் ஆகிறோம். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி இழப்பவர்கள் பள்ளிக் கல்வியோடு தங்கள் படிப்பை முடித்துக் கொள்வது இயல்பான நிகழ்வாக இருந்து வருகிறது. அந்தப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியிழந்தவர்களில் தொன்னூறு விழுக்காட்டினர் ஆங்கிலத்தில் தான் தேர்ச்சியிழக்கின்றனர் என்பதுதான் வரலாற்றுச் சோகம். ஆக ஆங்கிலம் இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் இருந்து தமிழகத்தில் பல்லாயிரவர்களை பள்ளிக்கல்வியோடு தங்கள் படிப்பை முடித்து கொள்கின்ற அவலத்தை நிறைவேற்றி வந்திருக்கிறது. இந்த பள்ளிக் கல்வியோடு தங்கள் வாழக்கையை முடித்து கொண்டவர்கள் தாம், சமூகத்தால் புரட்டிப் போடப்பட்டவர்களாக, சமூகத்தில் ஒரு நிலையை அடைய மிகுந்த போராட்டத்தை எதிர் கொள்கிறார்கள். இவர்கள் தாம்- தாங்கள் தேர்ச்சியிழந்த ஆங்கிலத்தில், தங்கள் பிள்ளைகள் தோற்று விடக் கூடாது என்ற அச்சத்தில் ஆங்கில வழிக் கல்வி, தரமான கல்வி, நடுவண் இடைநிலை வாரியக் கல்வி என்று பள்ளி பள்ளியாக தம் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அலைகிறார்கள். இவர்களால் தனியார் கல்வி நிறுவனங்களும், ஆங்கில வழிக் கல்வியும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கில் மூன்றாவது மொழி என்று ஒன்றோ, மூன்றாவது மொழியாக ஹிந்தியோ முன்னெடுக்கப் படுமேயானால் தமிழகம் தனக்குரிய அடிப்படை அற்றுப் போகும். வேண்டாம் ஹிந்தி மட்டுமல்ல. மூன்றாவது மொழியாக எந்த மொழியும்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,174.
ஆக, தேவையில்லாத இந்த ஆங்கிலம்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் இரண்டு மூன்றாம் வகுப்புகளில் இருந்தே கற்றுத்தரப் படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



