21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக அரசு, தமிழகத்தின் அனைத்து பொறியியல்; மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீண்ட காலமாக மதிப்பெண் அடிப்படையிலாக தயாரிக்கப்படும் தரவரிசைப் பட்டியலையே பயன்படுத்தி வந்தது. பொறியியல் கல்லூரிச் சேர்க்கைகளுக்கு மட்டும் அதே நிலையே தொடர்கிறது. வட மாநிலங்களில் தமிழகத்தைப் போலல்லாமல் மிகக் குறைந்த மருத்துவக் கல்லூரிகளையே கொண்டிருக்கிற நிலையில், அவர்களுக்கு மருத்துவ இடங்களை கூடுதல் ஆக்கும் நோக்கத்திற்காக, தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கும் உரிமையை நீட் என்கிற மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலமாக கடந்த சில ஆண்டுகளாக பிடுங்கி வைத்துக் கொண்டு வடமாநில மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையான பாடத்திட்டத்தில் தேர்வை முன்னெடுத்து வருகிறது நடுவண் பாஜக அரசு. நடப்பில் கொரோனா அச்சம் காரணமாக சமூக இடைவெளி பேணும் வகைக்காக நீட் தேர்வு வேண்டாம் என எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராடி வருகின்றன. காங்கிரஸ் கட்சி நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டி ஒரு நாள் நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுத்தது. ஆறுமாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்த்து உச்ச அறங்கூற்று மன்றத்தைக்கூட நாடியது. ஆனால் நடுவண் பாஜக இந்த மட்டில் தனது பிடிவாதத்தை கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளவில்லை. வருகிற ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதற்கு பொதுப்போக்கு வரத்து மற்றும் தொடர்வண்டி போக்குவரத்துகளுக்கும் தளர்வு அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்காக விண்ணபித்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை: 15,93,452 தமிழக மாணவர்களில் ஏழை மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு கிடைத்தாலும் செல்லமாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரிகளில் கட்டணம் அதிகம். தமிழகத்தில் 7300 இடங்களுக்கு 117502 மாணவர்கள் தேர்வு எழுதுகிற நிலையில் 16 பேர்களில் ஒருவருக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்க வேண்டும். இந்தியஅளவில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்: 36836 இந்தியாவில் 73151 இடங்களுக்கு 15,93,452 மாணவர்கள் தேர்வு எழுதுகிற நிலையில் 22 பேர்களில் ஒருவருக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு இயல்பாகவே 16 பேர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டியது- நீட் தேர்வு இந்திய அளவில் முன்னெடுக்கப்படுவதால் 22 பேர்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். மேலும் நடுவண் அரசு பாடத்திட்டத்திற்கு நீட் தேர்வு நடப்பதால் கூடுதலாக தமிழக மாணவர்கள் மருத்துவ வாய்ப்பை இழப்பார்கள். ஏழை மாணவர்கள் தனியார் கல்லூரிகளிலும் பிற மாநில அரசு கல்லூரிகளிலும் கூட சேரத் தயங்குவார்கள் என்கிற நிலையில் தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நடுவண் அரசின் நீட் தேர்வால் ஏராளமாகக் குறைந்து போகும்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக விண்ணபித்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை: 1,17,502 இது கடந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 17 விழுக்காடு குறைவு என்று சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் - 26
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் - 15
தமிழகத்தில் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் - 9
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மொத்தஇடங்கள் - 7,300
அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் - 3,300
தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் - 2,100
நிகர்நிலை பல்கலைக் கழக இடங்கள் - 1,900
இந்தியஅளவில் தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 36315
மொத்த இடங்கள்: 73151
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



