Show all

நடப்பு தமிழகக் கல்விமுறை ஓர் அலசல்!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அது தவறு என்று நிறுவதற்கான அலசலே இந்தக் கட்டுரை.

23,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சமச்சீர் கல்வி முறையின் காரணமாகத்தான் மாணவர்களின் தரம் வெகுவாகக் குறைந்துபோயிருக்கிறது. ஆகவேதான் மாநில அரசு ‘நீட்’ தேர்வை எதிர்க்கிறது என்ற வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது. 

ஆனால், சமச்சீர் கல்வி என்ற நடைமுறை (பாடத்திட்டம் அல்ல) உண்மையில் தரம் குறைந்ததா, அப்படியானால் எப்படித் தரம் குறைந்தது என்ற கேள்விகளுக்கு யாரிடமும் தக்க பதில் இல்லவேயில்லை.

பொதுவாக சமூகத்தில் நான்குவிதமான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன.
1.ஏழை மற்றும் பணக்காரன், 
2.நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், 
3.ஆண் மற்றும் பெண், 
4.கடைசியாக ஜாதியும். 
நகர்ப்புறத்தில் வசிக்கும் மேல் ஜாதியைச் சேர்ந்த பணக்கார மாணவனுக்குக் கிடைக்கும் வசதியையும் கல்வியையும் மலை என்று கொண்டால், கிராமப்புறத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவிக்குக் கிடைக்கும் கல்வியை மடு என்று சொல்லலாம் (அனிதாவை இந்த முரண்பாட்டில் பொருத்திப்பார்த்தால், அவரது சாதனை எத்தகையது என்று புரியும்).

இந்த முரண்பாடுகளை ஓரளவுக்காவது களையும் நோக்கத்தோடும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பல்வேறு கல்விமுறைகளையும் அவற்றை வைத்து நிறுவனங்கள் மாணவர்களைச் சுரண்டுவதை ஒழிப்பதற்காகவும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த விரும்பியது பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற திமுக அரசு.

அப்போது- தமிழ்நாட்டில் மாநில அரசின் கல்வி முறை, பதின்மக் (மெட்ரிகுலேஷன்) கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, நடுவண் இடைநிலைக் கல்விமுறை, ஓரியண்டல் ஸ்கூல் ஆப் எஜுகேஷன் என பல கல்விமுறைகளில் பாடம் கற்பிக்கப்பட்டுவந்தன. இதில் நடுவண் இடைநிலைக் கல்விமுறை பாடத்திட்டத்தை விட்டுவிட்டு மற்ற எல்லா கல்வி முறைகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இதற்குத்தான் சமச்சீர் கல்வி முறை என்று பெயர் வழங்கப்பட்டது.

14 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்க பாரதிதாசன் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் 9 வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே இது தொடர்பாக 109 பரிந்துரைகளை இந்தக் குழு அரசிடம் அளித்தது. இதையடுத்து இதற்கென சமச்சீர் கல்விச் சட்டம் இயற்றப்பட்டது. 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடை முறைக்கு வந்த இந்தச் சட்டத்தையடுத்து, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி ஆண்டில், முதல் வகுப்புக்கும் 6ஆம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 200 கோடி ரூபாய்க்கு புதிய பாடப்புத்தகங்கள் அடிக்கப்பட்டன.

இந்தப் புதிய சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தும்போது, தேசிய அளவில் கல்வியை நெறிமுறைப்படுத்தும் “கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு”வின் (என்சிஇஆர்டி) விதிமுறைகளின்படியே பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. உண்மையில் “கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு”வின் நெறிமுறையை எந்தக் கல்வித் திட்டமும் மீற முடியாது. எடுத்துக்காட்டாக, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அல்ஜீப்ரா’ அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்றால், அறிமுகப்படுத்த வேண்டும். 12ஆம் வகுப்பில் ‘தெர்மோ டைனமிக்ஸ்’ இருக்க வேண்டுமென்றால் அது இருக்க வேண்டும்.

ஏனென்றால் பள்ளிக் கல்வி பொது பட்டியலில் இருக்கும் நிலையில், தேசியக் கல்விக்குழுவின் கல்வி கட்டமைப்பு படிதான் இந்தியா முழுவதும் பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். நடுவண் இடைநிலை கல்விமுறையும் இதையே பின்பற்றும். சமச்சீர் கல்வியும் இதையே பின்பற்றி பாடத்திட்டத்தை வகுக்கும். அப்படியான சூழலில், நடுவண் இடைநிலைக் கல்வியைவிட இந்தச் சமச்சீர் கல்வியில் பாடத்தின் தரம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

ஆனால், பதின்மக் கல்விமுறை (மெட்ரிகுலேஷன்) பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை படிக்கவைத்துக் கொண்டிருந்தவர்கள் இதில் பெரும் வருத்தமடைந்தார்கள். தாம் பெரும் பணத்தைக் கட்டி குழந்தைகளைப் படிக்கவைக்கும்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நம் குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்கவே முடியவில்லை. அதேபோல, தாங்களே பாடத்திட்டத்தை வகுத்து, அதற்கேற்றபடி தனியாரிடம் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளிகளும் இதனை எதிர்த்தன.

அதற்கேற்றபடி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு செயலலிதா பதவியேற்ற ஒரு கிழமையிலேயே, முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் சமச்சீர் கல்வி இரத்துசெய்யப்படுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு வழக்குகள் நடந்தன. முடிவில் சமச்சீர் கல்வித் திட்டத்தை உச்ச அறங்கூற்றுமன்றம் உறுதிசெய்தது.

உச்ச அறங்கூற்றுமன்றத்திற்கு இதுதொடர்பான வழக்கு சென்றபோது, “கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு”வின் வல்லுனர்களை வைத்து பாடத்திட்டதை ஆய்வுசெய்ய உச்ச அறங்மன்றம் உத்தரவிட்டது. அந்த ஆய்வின் முடிவின்படியே இந்தப் பாடத்திட்டத்தையே நடைமுறைப்படுத்த அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

அப்படியானால், இப்போது உள்ள மாநிலக் கல்வி முறையில் சிக்கலே இல்லையா என்றால், ஆம் உறுதியாக மாநிலக் கல்வி முறையில் எந்தச் சிக்கலும் இல்லைதான்.

மாறாக பாடத்திட்டத்தை அவ்வப்போது நடைமுறைக்கு ஏற்ப புதுப்பிப்பு செய்யாமை மட்டுமே குறை. செயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப் படவேயில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாடத் திட்டத்தை நடைமுறைக்கு ஏற்ப புதுப்பிப்பதற்கு என்று ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தனது பரிந்துரையை உடனே அளித்துவிட்டது.

அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சென்றுவிட்டன. மூன்று முதல்வர்கள் வந்துவிட்டார்கள். இருந்தபோதும் பாடத்திட்டம் நடைமுறைக்கு ஏற்ப புதுப்பிக்கப் படவில்லை. உதயசந்திரன் பள்ளிக்கல்விச் செயலரான பிறகுதான் அதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கின. இதை எப்படி சமச்சீர் கல்வி முறையின் குறைபாடாகச் சொல்ல முடியும்?

அப்படியானால் நீட் தேர்வு போன்ற தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் ஏன் தேர்ச்சிபெறுவதில்லை? காரணம், தேர்வு முறையில் உள்ள வேறுபாடுதான். நடுவண் இடைநிலைக் கல்வியின் தேர்வு முறையிலும் சமச்சீர் கல்வியின் தேர்வு முறையிலும் வேறுபாடுகள் உண்டு. 

மாநில அரசு கல்வி முறையில் மாணவர்கள் நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். நடுவண் இடைநிலைக்கல்வியில் படித்ததைப் பொருத்தி பதிலளிக்க வேண்டும். இப்போது தேசிய அளவிலான தேர்வுகள் எல்லாமே இந்த முறைக்கு மாறிவரும் நிலையில், தமிழக தேர்வு முறையிலும் சிறிது சிறிதாக இந்த முறைக்கு மாறுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன.

ஆனால் உண்மையில் இந்தப் பொருத்தி பதிலளித்தல் என்கிற முறை மிகச்சில மாணவர்களுக்கு மட்டுமே நோக்கத்திற்கு பயன்படுவதாயிருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் அந்த முறைக்கு நிறுவனங்கள் மூலமாகப் வெறுமனே மனப்பாடமாக அல்லது சில குறுக்கு வழிகளாகப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

இதை உறுதிப்படுத்தும் முகமாக- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஒரு முறை சொன்னார், “நடுவண் இடைநிலைக் கல்வியில் படித்து, இந்தியத் தொழில் நுட்ப கழகத்திற்குத் (ஐஐடி) தேர்ச்சிபெறும் மாணவர்கள் அங்குள்ள தேர்வுகளையும் பாடங்களையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் நிறையவே உண்டு. ஆனால், மாநிலப் பாடத்திட்டத்தை படித்துவிட்டு இந்தியத் தொழில் நுட்ப கழகத்தில் சேர்ந்தவர்களோ, மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களோ இப்படிச் செய்துகொண்டதாக வரலாறு உண்டா? அப்படியிருக்கும்போது ஏன் மாநில கல்விமுறையைக் குறைசொல்கிறீர்கள்” என்று கேள்;வி எழுப்பினார்.

ஒப்பீட்டளவில் பள்ளிக் கல்வியில் ஒரளவுக்கு சிறந்த கட்டமைப்பு தமிழகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு 1 கி.மீ சுற்றளவிலும் ஒரு தொடக்கப் பள்ளி இருக்கிறது. ஒவ்வொரு 3 கி.மீ. சுற்றளவிலும் ஒரு நடுநிலைப் பள்ளி இருக்கிறது. ஒவ்வொரு 7 கி.மீ. சுற்றளவிலும் மேல் நிலைப் பள்ளி இருக்கிறது. 7 கி.மீ. சுற்றளவுக்குள் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது.

அதேபோல, இந்தியாவின் பிற மாநிலங்கள் எல்லாவற்றிலுமே முந்தை-ஆசிரியர்கள் உண்டு. 12 வகுப்பு முடித்துவிட்டு பள்ளிக்கூடங்களில் கற்பிப்பவர்கள் இவர்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் இந்த முறை கிடையாது. பணியில் சேர, ஆசிரியர் பயிற்சியோ, கல்வியியல் பட்டமோ முடித்திருக்க வேண்டும். இங்கே யாரும் முந்தை-ஆசிரியர்கள்; என்ற சொல்லே  கேள்விப்பட்டதில்லை.

இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டியது 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை நடைமுறைக்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டியதும் படிப்படியாக தேர்வுமுறையை மாற்ற வேண்டியதும்தான்.

பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் செய்திகள் சமச்சீர் கல்வித் திட்டத்திலும், நடுவண் இடைநிலைக் கல்வித் திட்டத்திலும் ஒன்றேதாம். தேர்வு முறைகள் தாம் இரண்டுக்கும் வேறுவகையாக இருக்கின்றன. சமச்சீர் கல்விமுறையில்  அகநிலைத்தேர்வு (சப்ஜெக்டிவ் மெத்தேட்) முறை பின்பற்றப் படுகிறது. நடுவண் இடைநிலைக் கல்வியில் புறநிலைத்தேர்வு (ஆப்ஜெக்டிவ் மெத்தேட்) முறை பின்பற்றப் படுகிறது. 

தனி ஊசலை கண்டுபிடித்தது யார் என்று கேள்வி கேட்டு, தனி ஊசலைக் கண்டுபிடித்தவர் கலிலியோ என்ற பதிலை எழுதும் போது 2மதிப்பெண்களும் வெறுமனே கலிலியோ என்று மட்டும் எழுதியிருந்தால் 1மதிப்பெண்ணும் வழங்குவது சமச்சீர் கல்விமுறை பின்பற்றும் அகநிலைத்தேர்வு (சப்ஜெக்டிவ் மெத்தேட்) முறையாகும்.

தனி ஊசலைக் கண்டுபிடித்தவர்:
1.ஆரியப்பட்டர் 2.கலிலியோ 3.டால்டன் 4.மார்க்கோணி என்று நான்கு வாய்ப்பு கொடுத்திருப்பார்கள்.
கலிலியோ என்று சரியான விடையை ‘சரி’ குறியிட்டால் 2மதிப்பெண்கள் தருவார்கள். மற்ற மூன்று விடைகளில் ஏதாவதொன்றுக்கு ‘சரி’ குறியிட்டால் ஒரு கழித்தல் மதிப்பெண் தருவார்கள். இது நடுவண் இடைநிலைக் கல்வியில், நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முன்னெடுக்கப்படுகிற புறநிலைத்தேர்வு (ஆப்ஜெக்டிவ் மெத்தேட்) முறையாகும்.

அகநிலைத் தேர்வு முறை சிறந்ததா? புறநிலைத் தேர்வு முறை சிறந்ததா என்று கோபிநாத் அவர்களை வைத்து ஒரு நீயாநானா நிகழ்ச்சியை விஜய் தொலைக் காட்சி முன்னெடுக்கலாம் என்று நீயாநானா குழுவிற்கு நமது பரிந்துரையை முன்வைப்போம். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.