Show all

21நாட்களுக்குப் பிறகு ஊரடங்கு தேவைப்படாது! கொரோனா இருப்போர் கொரோனா இல்லாதோரை- அரசு நிகழ்நிலையில் அடையாளம் காட்டினால்

கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கான காலத்தை திட்டமிட்டு யாராலும் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. அதுவரை ஊரடங்கை நீட்டிப்பது சாத்தியமில்லை. மாற்றாக- கொரோனா இருப்பவர்களையும், கொரோனா இல்லாதவர்களையும் அரசு நிகழ்நிலையில் அடையாளங்காட்ட முனைந்தால் போதும். ஊரடங்கை முழுமையாகத் தளர்த்திக் கொள்ள முடியும்.  

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க செல்பவர்கள் மாப்பிள்ளை குறித்து கொஞ்சம் அதிகமாக விசாரிப்பது தமிழகத்து நடைமுறையாகும். பெண்களைப் பொறுத்தவரை அவ்வளவு விசாரணைக்கு உட்படுத்த மாட்டார்கள்.
மணப்பெண்ணிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்: 
1. பெண் அழகாக இருக்கிறாளா? இது மாப்பிள்ளைக்கும் குடும்பத்தாருக்கும் இந்த அழகு போதும் என்கிற அழகு.
2. பெண் வேலையில் இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது?
3. பெண்ணுக்குப் போடப்போகும் நகை, வரதட்சனைகள்
இவற்றையெல்லாம் நேரடியாகவே விசாரித்து விடுவார்கள்.
மணமகனிடம் எதிர்பார்க்கும் தகுதிகளை நேரடியாகத் தெரிந்;து கொள்ள முடியாது. கொஞ்சம் விசாரித்தே ஆக வேண்டும் என்கிற நிலை இருக்கிறது. 
1. மணமகன் வேலையில் இருக்கிறாரா?
2. மணமகனின் சம்பளம்?
3. மணமகனின் சொத்துக்கள்?
4. மணமகனின் ஒழுக்கம்?
5. மணமகனின் கல்வி?
6. மணமகனின் பெற்றோர் இருவரும் உயிரோடு உள்ளனரா?
7. மணமகனின் அக்காள் தங்கைகள் எண்ணிக்கை?
8. மணமகனின் அண்ணன் தம்பிகள் எண்ணிக்கை?
9. பூர்வீக சொத்து பிரிக்கப்பட்டு விட்டதா?
10. மணமகன் வேலை குறித்து முழுமையான தகவல் அல்லது தொழில் குறித்து முழுமையான தகவல்கள் என்று விசாரித்தே தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான கேள்விகள் உள்ளன.

இவற்றை சிறப்பாக முன்னெடுத்தே, நமது குடும்பங்கள் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதிது புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. 

இப்படி உருவாகி வரும் தமிழ்க் குடும்ப அமைப்புமுறை ஐயாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது. 
பிள்ளைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்விப்பது என்கிற பிள்ளைகளுக்கான கடமைகள் அனைத்தும் பெற்றோர்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது தமிழ்க் குடும்ப அமைப்புமுறையில். அவற்றுக்கான பொருளைப் பெற்றோர்கள் தொழில் மூலமாகவே ஈட்டுகின்றனர். 
இந்தக் குடும்பத்திற்கு உருவாக்கப்படுகிற எந்தச் சிக்கலும் குடும்பத்திற்குள் இருந்து உருவாதில்லை.

பழந்தமிழ்ச் சமூகம் என்பதும் குடும்பம் போலவே அழகாக கட்டமைக்கப்பட்டதாகவேயிருந்தது. மக்கள், புலவர்கள், மன்னர் என்று சிறப்பான நிருவாகமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கோயில், கழனி, அணைக்கட்டு, வணிகம் என்று சமுதாயம் வளமாகப் பேணப்பட்டிருந்தது. மக்கள்; தலைகள் மீது கடன் வாங்குவதற்கு உலக வங்கிகள் எல்லாம் இருக்கவில்லை. அரசு சாராயக்கடைகள் நடத்தி, மக்களின் ஒழுக்கம் சீராழிக்கப்பட்டு மக்களின் உழைப்பு சுரண்டப்படவில்லை.

இன்றைக்கு நாம் ஏற்றுக் கொண்டிருக்கிற சட்டசமுக அமைப்பு தன் அங்கமாக கருத வேண்டிய குடும்பங்கள்மீது எந்தப் பொறுப்பும் இல்லாமல்,
அனைத்துக் குற்றப்பின்னனிகளுக்கும் பயிற்றுக் களமாக இருக்கிற சாராயக் கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்க் குடும்பங்களுக்கு தம்பிள்ளைகளை இற்றைச் சமுதாய அமைப்பில் இருந்து காப்பாற்றி சான்றோர்களாக வளர்த்தெடுப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது. 

இந்த நிலையில்தான் நேற்றைக்கு:- கருப்புப்பணம், கள்ள ரூபாய் தாள் ஒழிப்புக்கு தமிழ்க் குடும்பங்கள் மணமகனை விசாரித்து திருமண நடவடிக்கையை முன்னெடுப்பது போல- 
நம்ம மோடி அரசு குற்றத்தின் ஊற்றுக்கண்ணில் இருந்து நடவடிக்கையைத் தொடங்காமல், குத்து மதிப்பாக ஒட்டுமொத்த மக்களையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையாக பணமதிப்பிழப்பு செய்தது.

இன்றைக்கு கொரோனா பாதிப்புக்கு எதிராகவும் கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை கொரோனா பரப்பும் ஊடகமான வெளிநாட்டினர் வருகையை முற்றாக தடைபடுத்தாமல் விட்டு விட்டு, 
தற்போது, கொரோனா ஊடகமாக மாறிவிட்டவர்கள் யார் யார் என்றே தெரிவிக்காமலே, ஒட்டுமொத்த மக்களையும் கொரோனா பரவுதலுக்கு எதிராக 21நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறையை அறிவித்திருக்கிறது. அதாவது அனைத்து மக்களுக்கும், ஒளிதல் நடவடிக்கையை முன்னெடுக்கப் பணித்திருக்கிறது. 
மேலோட்டமாகப் பார்த்தால் இது சரிபோலவேதாம் தோன்றும் ஆனால் இதில் வாழ்மானத்தை இழக்கப் போகிற பலமக்களின் நிலைக்கு அரசு என்ன தீர்வு வைத்திருக்கிறது என்றால் இல்லை என்பதுதாம் விடை.  

சரி எடுத்த நடவடிக்கை எடுத்த நடவடிக்கையாகவே இருக்கட்டும். 21நாட்களுக்குப் பிறகும் ஊரடங்கை தொடராமல் இருக்க நடவடிக்கையை முன்னெடுத்தால்;தானே 21 நாட்களுக்குப் பின்னர் ஊரடங்கைத் தளர்த்த முடியும். கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கான காலத்தை திட்டமிட்டு யாராலும் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. அதுவரை ஊரடங்கை நீட்டிப்பதும் சாத்தியமில்லை.

அரசு உடனடியாக கொரோனா பதிப்பில் உள்ளவர்களை யார் யார்  என்று கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் தெரிந்து கொண்டு அவர்களோடு பழக ஒவ்வொருவர் செல்பேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டால் இவர் கொரோனா நேயுள்ளவர் என்றும், இவர் உங்களைப் போல கொரோனா நோய் இல்லாதவர் என்றும் ஒலிச்சேதியை தெரிவிக்க முயற்சி எடுக்கலாம். அரசால் எளிதாக சாத்தியமாகிற முயற்சியே இது. இதற்கான வேலைகளை இப்போதிருந்தே தொடங்கலாம். 

மக்கள் வீட்டில் முடங்காமல் கொரோனா இல்லாதவர்களோடு தொழில் வணிகத் தொடர்பை முன்;னெடுக்கலாம். இதனால் தனிமனிதர்களின் வாழ்மானம் கெடாமலே கொரோனா பரவலை தடுக்கமுடியும். இப்படி எந்த மாற்றும் இல்லாமல் ஊரடங்கைத் தொடர்வோமேயானால் ஐயகோ இனி என்ன செய்வது என்கிற நிலை 21நாட்களுக்குப் பிறகு அரசுக்கு வரும் என்றே பெரும்பான்மையானவர்களால் கருதப்படுகிறது. உலக நலங்கு அமைப்பும் அந்தநிலைவரும் என்று எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.