Show all

இன்றும் தேவையாய் இருக்கிறது! அன்று நடுவண் அரசின் மாநிலங்களவையில் அண்ணா அவர்கள் தேசியம் குறித்து பேசிய பகுதி:

நடுவண் அரசு மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவர் உரைமீது ஆற்றிய சொற்பொழிவில், அண்ணா அவர்கள் தேசியம் குறித்து பேசிய பகுதி:

13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேசியம்: எந்தக் கட்சியைச் சார்ந்திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது மிகவும் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இப்போது அதிக வழக்கத்திலிருக்கும் வார்த்தையை உபயோகிக்க வேண்டுமானால் அதை தேசிய ஒருமைப்பாடு என்று அழைக்கலாம்.

அதைப்பற்றிப் பேசும் முன் ஒன்று கூற விரும்புகிறேன். விடுதலை பெற்று 15 ஆண்டுகள் கழித்து, தேசிய அரசாங்கம் ஒன்று 15 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய பின்னரும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முயற்சி எடுத்துக் கொள்வது இதுவரை செய்து வந்த சிந்தித்து வந்ததற்கெல்லாம் எதிரிடையானது, என்று தானே பொருள்? தேசியத் தலைவர்கள் இத்தனை நாள் செய்துவந்த முயற்சி அனைத்தும் கனியவில்லை என்று தானே பொருள்? இன்றைக்கு மட்டும் ஏன் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசவும், திட்டம் தீட்டவும் புறப்பட்டுள்ளோம்?

தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்களும் ஹிந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசிய ஒருமைப்பாட்டிற்கான வழியா? தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது. கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை.

எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல.

நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் தமிழன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல.

நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன், தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் போது, எங்களிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,197.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.