12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பதின்மூன்று பேர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடக் கோரி டெல்லி உயர் அறங்கூற்றுமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.ராஜராஜன் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாவிட்டாலோ, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடாமல் இருந்தாலோ காவல்துறையினரின் சட்டவிரோத கொலை தொடரவும், ஆதாரங்கள் அழிக்கப்படவும் வாய்ப்புள்ளது' என்று கூறியிருந்தார். இந்த மனு அறங்கூற்றுவர் ராஜீவ் ஷக்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுவர், இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து ஏற்கெனவே கையில் எடுத்துள்ளது. எனவே மனுதாரர் தகுந்த உத்தரவுக்காக மனித உரிமை ஆணையத்தையே அணுகலாம். இது தொடர்பான மனுவை வரும் செவ்வாய்க் கிழமைக்குள் ஆணையத்திடம் மனுதாரர் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறை உயரதிகாரிகள் பலர் தொடர்புடையவர்களாக உள்ளனர். எனவே, இந்த வழக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவானது, உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் ஏ.எம். கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அறங்கூற்றுவர்கள், வரும் திங்கள்கிழமை, இந்த மனுவை அவசர வழக்குகளுக்கான பட்டியிலில் பதிகை செய்யுமாறு உத்தரவிட்டனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,799.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



