13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் பாஜக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, ஆட்சியின் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. வழக்கமான இருக்கை திருவிழாதான்; இருக்கைகள் தான் நிறைய போடப் பட்டிருந்தன. நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன், மதுரை மாநகர் தலைவர் சசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, வழக்கமான பாஜகவின் தாரக மந்திரமான, 'பாஜக கைப்பற்றாத மாநிலங்கள் எல்லாம் பயங்கரவாதிகளின் கூடாரம்' என்கிற மந்திரத்தை முழங்கினார். பயங்கரவாதத்தைத் தடுக்க மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படாத வண்ணம் மும்முறை தலாக் முறைக்கு தடை கொண்டு வந்தார் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி என்றார் பெருமிதமாக. ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என பாஜக சொல்லவில்லை. என்றும் கூறினார். பயங்கரவாதிகளுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு பயங்கரவாதிகளின் பங்கு உள்ளது. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன். அதை தடுக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். என்று கூறினார். எல்லாம் சரி! இந்த நாலு ஆண்டுகளா பாஜக பிடுங்கிய ஆணிகள் எத்தனை என்பதை சொல்லுங்கப்பா- இல்லாட்டி நீங்க பிடுங்கின உயிர்களின் பட்டியலை நாங்க வெளியிடறோம் என்று முனகிக் கொண்டிருந்தார்கள், வேடிக்கை பார்க்க அரங்கத்திற்கு வெளியே நின்றிருந்த மக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



