Show all

தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும்கண்டனம்! நியூட்ரினோ வழக்கில் விளக்கம் அளிக்காத நடுவண் அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் டாட்டா நிறுவனம் நடுவண் அரசிடம் புதிதாக ஒரு மனு அளித்தது. இதை ஆய்வு செய்த நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வகப் பணிகளை தொடர அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுபதிகை செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை புதன் கிழமையன்று நடைபெற்றது. அப்போது இந்த விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தொடர்பாக நடுவண் அரசு, நேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது நடுவண் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரப்பில் எந்த அதிகாரியும் அணியமாகவில்லை. இதனால் விளக்கம் அளிக்காத நடுவண் அரசுக்கு, அறங்கூற்றுவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட அறங்கூற்றுவர்கள், இறுதி முடிவு எடுக்காத நிலையில் தமிழக அரசு எப்படி வனத்துறை நிலத்தை ஒதுக்கியது? 
ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கை இருக்கும்போது இந்தத் திட்டம் அதில் கூறப்பட்டு இருப்பதற்கு பாதிப்பு ஏற்படுத்தாதா?. அணுவை பல துகள்களாக சிதற அடிக்கும்போது சுற்றுச்சூழலும் பாதிப்பு அடையாதா? 
இது தொடர்பாக நடுவண் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒரு மூத்த அதிகாரியோ, விஞ்ஞானியோ இன்று (வெள்ளிக்கிழமை) அணியமாகி விளக்கம் அளிக்க வேண்டும். டாடா நிறுவனமும் திங்கட் கிழமைக்குள் எழுத்து வடிவில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,931.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.