Show all

ஆங்கிலத்தை மறந்து விட்டு மாநில மொழிகளுக்கு செல்லுங்கள்! இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் தலைவர்

ஆங்கிலத்தை மறந்து விட்டு மாநில மொழிகளுக்கு செல்லுங்கள்! ஏன்று இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கிலத்தை மறந்து விட்டு, மாநில மொழிகளுக்குச் செல்லுங்கள் என, நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை, இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் (என்ஐடிஐ கமிசன்) தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் காணொளிக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய, அமிதாப் காந்த் மேலும் கூறியதாவது: மாநில மொழிகளைக் கைக்கொள்வது, முன்னேறுவதற்கான வழியாகும். நிதி தொடர்பான தேவைகளை ஆங்கிலத்தில் மட்டுமே வழங்குவது என்றில்லாமல், மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும். நிதி சேவைகளை, முழுக்க உள்ளூர் மயமாக்க வேண்டும். நிதித்துறை நிறுவனங்கள், மாநில மொழிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளா விட்டால், முந்தைய முயற்சிகள் அனைத்தும் வீணாக நேரிடும். மேலும் மக்கள் அந்நியப்பட்டுவிடுவர்.

இந்தியாவில், நிதி சேவைகளை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்றனர். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், 36 விழுக்காட்டினர் என்றிருந்த நிலையில், தற்போதைய நிலையில் 80 விழுக்காடாகி இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, தேவைப்படும் பிரிவினருக்கு எண்ணிம முறையில் பணத்தை வழங்க முடியும் என்ற நிலைக்கு, இந்தியா உயர்ந்துள்ளது. ஆனால், வெறுமனே சேமிப்பு கணக்கு தொடங்குவது, நுண் கடன் வழங்குவது, நுண் காப்பீடு வழங்குவது ஆகியவற்றுடன் நின்றுவிடாமல், அதையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

நம் நாட்டில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், மூலதன சந்தைகளில், மக்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருக்கிறது. நகர்ப்புறங்களில் தான் அதிக முதலீட்டாளர்கள் உள்ளனர். மூலதன சந்தைகளை விரிவுபடுத்த, கிராமப்புற பங்களிப்பு கட்டாயம். நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆங்கிலத்தை மட்டும் பயன்படுத்தாமல், மாநில மொழிகளையும் பயன்படுத்த முன்வர வேண்டும். அப்போது தான், கிராமப்புற பங்களிப்பும் அதிகரிக்கும். அதே நேரத்தில், முறையான நிதிச் சேவைகளின் பாதுகாப்பும் அதிகரிக்க அவை உதவும். இவ்வாறு, அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.