Show all

முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டவிரோதமானது: உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல்சாசன அமர்வு

முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, சட்ட விரோதமானது என்று இந்திய உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல் சாசன அமர்வு அறிவித்துள்ளது.

ஐந்து அறங்கூற்றுவர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ்.கெஹரும், அறங்கூற்றுவர் நஜீரும், முத்தலாக் முஸ்லிம் மதத்தினரின் அடிப்படை உரிமை என்று கூறினர்.

ஆனால், அறங்கூற்றுவர்கள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோர், முத்தலாக் வழக்கத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்.

முத்தலாக் விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் 8 முக்கிய விசயங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன:

1. புனித குரானின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக முத்தலாக் இருப்பதால் அது ஷரியத்தை மீறும் வகையில் உள்ளது.

2. ஆதாரப்பூர்வமான திருமண ஒப்பந்தத்தை முத்தலாக் எனக் கூறி தன்னிச்சையான முறையில் வெளிப்படையாக முஸ்லிம் நபர் முறித்துக் கொள்ள உதவுகிறது இந்த வழக்கம்.

3.முத்தலாக்கை மத ஒழுக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருத வேண்டும். அந்த வழக்கத்தை முஸ்லிம் மத சட்டத்தின் அங்கமாகக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை அறங்கூற்றுவரின் கருத்தை ஏற்றுக் கொள்வது முற்றிலும் கடினமானது என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள அறங்கூற்றுவர் குரியன் ஜோசஃப் கருத்து. இதே கருத்தை அறங்கூற்றுவர்கள் ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோரும் ஏற்றுக் கொண்டு தங்களின் தீர்ப்பில் ஆமோதித்துள்ளனர்.

4. முத்தலாக் என்பது உடனடியாகவும் மாற்றிக் கொள்ள முடியாததுமாக இருப்பதால், பிரிந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பே எழாமல் போகிறது.

5. அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கும் அரசியலமைப்பின் 14-ஆவது விதியை மீறும் வகையில் முத்தலாக் உள்ளது.

6. முஸ்லிம் மதத்தின் முதலாவது சட்ட ஆதாரமாக புனித குரான் கருதப்படுவதால் அதற்கு மட்டுமே மதிப்பு அளிக்க வேண்டும் - அறங்கூற்றுவர் ஜோசஃப் குரியன்.

7. சட்டம் அனுமதிக்கும் தலாக் முறையின் ஒரு வடிவமே முத்தலாக். அதேவளை, அதை சகித்துக் கொள்ளும் ஹனாஃபி பள்ளி கூட முத்தலாக்கை பாவத்துக்குரிய செயலாகக் குறிப்பிட்டுள்ளது - அறங்கூற்றுவர் ஆர்.எஃப். நாரிமன்.

8. நீண்ட காலமாக ஒரு வழக்கம் சுயமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்காக அதை வெளிப்படையாக அனுமதிக்கக்கூடிய நடவடிக்கையாக அறிவித்து செல்லத்தக்கதாக ஆக்க முடியாது - அறங்கூற்றுவர் ஜோசஃப் குரியன்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.