Show all

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தான் போங்கள்: ஷியா போர்டு தலைவர்

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும் செல்லலாம் என உ.பி., மாநில ஷியா வக்ப் போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி பேசியுள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

      அயோத்தியில் தொழுகை நடத்திய வசீம் ரிஜ்வி, பின்னர் ராம் ஜென்மபூமியின் தலைமை குரு ஆச்சார்யா சத்யேந்திர தாசை சந்தித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், அயோத்தியில், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களும், பாபர் மசூதி கட்ட நினைக்கும் எண்ணத்தில் இருப்பவர்களும் பாகிஸ்தான் மற்றம் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டும்.       அந்த எண்ணம் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை. மசூதி பெயரில், ஜிகாத்தை பரப்ப நினைப்பவர்களும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணையலாம். அடிப்படைவாத எண்ணம் கொண்ட முஸ்லிம் மத குருமார்கள் நாட்டை சீரழிக்க நினைக்கின்றனர். அவர்கள் ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

      ரிஜ்வியின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஷியா உலாமா கவுன்சில் தலைவர் மவுலானா இப்திகார் ஹூசைன் கூறுகையில், வக்ப் சொத்துகளை சட்டவிரோதமாக விற்றும், ஊழல் செய்தும் ரிஜ்வி குற்றவியல் செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை பதிகை செய்துள்ளது. தன்னை காத்து கொள்ளவே அவர் பெரிய நாடகம் ஆடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

      உ.பி. முஸ்லிம்கள் இடையே அதன் ஒரு பிரிவான ஷியாக்களின் தலைவர் வசீம் ரிஜ்வி சர்ச்சைக்குரிய தலைவராகக் கருதப்படுகிறார். தான் வகிக்கும் வஃக்பு வாரியப் பதவியில் நடைபெற்ற ஊழலின் விசாரணையில் இருந்து தப்ப ரிஜ்வி, பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் நிலவுகிறது. இதனால், ரிஜ்வியின் செயல்பாடுகள் சமீபகாலமாக முஸ்லிம்களின் ஷியா மற்றும் சன்னி ஆகிய இருபிரிவினராலும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது.

      இதற்கு முன் ரிஜ்வி, மதரஸாக்கள் குறித்து மோடிக்கு எழுதிய கடிதத்தில் அவை தீவிரவாதம் பரவும் அமைப்புகளாகி வருவதாகப் புகார் கூறி இருந்தார். இதற்கு முஸ்லிம்களின் இரு பிரிவினர் இடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

      குடியரசு நாள் மற்றும் விடுதலை நாட்களில் அனைத்து மதரஸாக்களிலும் மூவர்ணக்கொடி ஏற்றி நாட்டுப் பண் பாடப்பட வேண்டும் எனவும் ரிஜ்வி வலியுறுத்தி இருந்தார். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51(ஏ)-ன்படி ஒவ்வொரு இந்திய குடிமகனின் தார்மீகப் பொறுப்பு எனவும் ரிஜ்வி குறிப்பிட்டுருந்தார்.

      கடந்த ஆண்டு உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் புதிதாகப் பொறுப்பு ஏற்ற பாஜக அரசு விடுதலை நாளையொட்டி மதரஸாக்களுக்கு ஒரு உத்தரவிட்டது. அதில், ரிஜ்வி கூறியிருப்பதை முன்னமே அறிவுறுத்தி இருந்தது. ஆனால், நாட்டுப்பண் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது எனக் கூறி பல மதரஸாக்கள் அதற்கு பதிலாக ‘சாரே ஜஹான்சே அச்சா எனும் பாடலைப் பாடி இருந்தனர். ஏற்கெனவே ரிஜ்வி, அயோத்தி விவாத வழக்கில் முஸ்லிம்கள் இந்துக்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என கூறியது சர்ச்சையானது. பிறகு டெல்லியின் வரலாற்றுச் சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்தற்கும் கண்டனம் எழுந்தது. அடுத்து மதரஸாக்களில் தீவிரவாதம் பரவுவதாக கூறியதை எதிர்த்து ரிஜ்வி மீது பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வழக்குகளும் தொடுத்துள்ளன.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,687

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.