ரோம் பற்றியெரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக- கொரோனாவின் ஆட்சி, பங்குசந்தையின் வீழ்ச்சி என்று உலகமே அல்லோகல்லோலப்பட்டு வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க, பாஜக- சிந்தியா(பிடில்) இசைத்துக் கொண்டிருக்கிறது. 27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பங்குசந்தையின் வீழ்ச்சி, டாலருக்கு எதிரான பண மதிப்பு சரிவு, இந்தியாவில் 42க்கு மேலானவர்களுக்கு கொரோனா தொற்று என்று மக்கள் பதைபதைத்து கொண்டிருக்கும் நிலையில்- மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. என்பதே பாஜகவிற்கு பெரிய பதைபதைப்பு போல இருக்கிறது. முதல் அமைச்சராக கமல்நாத் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோதிர்ஆதித்யா சிந்தியா, கமல்நாத் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கவைக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஜோதிராதித்ய சந்தியா இன்று தலைமைஅமைச்சர் மோடியை சந்தித்து பேசியதாகவும், உள்துறை அமைச்சர் அமித்சாவும் அப்போது உடன் இருந்ததாகவும் தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் விலகல் செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, சுயேச்சை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் அதிருப்தி அடைந்தனர். இந்தச் சூழலை பயன்படுத்தி 107 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் தொடக்கமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை ஹரியாணாவின் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து கலந்துரையாடல் நடத்தியது. இதையடுத்து 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவப் போவதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா கையில் பண பெட்டியுடன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசியுள்ளார். பாஜகவுக்கு வரும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை கொடுப்பதாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார்” என குற்றம்சாட்டினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



