Show all

பாஞ்சாலியா? ஒற்றைச் சொல் தூண்டிய கடுங்கோபம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றைச்சொல், அது குறித்த ஒற்றைக்காட்சி தெரிவிப்பது என்ன

பாஜகவை ஆட்சிக்கு அங்கீகரிக்க தமிழர்கள் விரும்பமாட்டார்கள்! ஏன் என்பதற்கு பெரியார் பல கூட்டங்களில் கொடுத்த விளக்கம் பதிலாக அமையும். அதே விளக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முன்னெடுத்திருக்கிறது.

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் மன்னர்கள் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டியிருக்கின்றார்கள். தமிழகத்தில் கோயில் இல்லாத ஊரே இல்லை. இந்தத் தமிழ் மக்கள் அலை அலையாக கோயிலுக்குப் போகின்றார்கள். 

இராமயணத்தை தொடராக கொணர்ந்தால், விழுந்து விழுந்து பார்க்கின்றார்கள். மகாபாரதத்தை எந்தக் கோணத்தில் கதையாக்கி தொடராகவோ திரைப்படமாகவோ தந்தால் அதையும் கொண்டாடத்தான் செய்கின்றார்கள். 

விநாயகர் ஊர்வலம் நடத்தினாலும் பெருந்திரளாகத்தான் கலந்து கொள்கின்றார்கள். ஆனால் அதை அடிப்படையாக வைத்து- தமிழர்களும் ஹிந்துக்கள்தானே என்று நினைத்து தமிழகத்தில் பாஜகவை மலரச் செய்து விடலாம் என்று பார்த்தால், ஹிந்துத்துவா கட்சியான பாஜகவை நோட்டா அளவிற்குக் கூட மதிக்க மறுக்கின்றார்கள். 

இதே தமிழ் மக்கள், நாத்திகவாத திராவிடக் கட்சிகளைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றார்கள். பெரியார் என்றால் அப்படி உருகுகின்றார்கள். இதுதான் புரியவே மாட்டேன் என்கிறது பாஜகவின் இந்தியத் தலைமைக்கு. 

தமிழன் ஒவ்வொருவனும் தானே அறிவாளியாக கெத்து காட்டுவான். தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எந்த ஒரு மதத்தையும் விரும்ப மாட்டார்கள். தமிழர்களில் அப்பா ஒரு மதத்தில் இணைந்திருக்கிறார் என்பதற்காக மகனையோ மகளையோ அந்த மதத்திற்கு நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் தமிழர்களுக்கு சமூகமாக சேர்ந்து கட்டமைத்த பொருள் இலக்கணம் இருக்கிறது. அது அவர்கள் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் தமிழ்பண்பாடாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எந்;த ஒரு தலைவனையும் விரும்ப மாட்டார்கள். அப்படி விரும்புகிறவர்கள் தனித்தனியாக ஆளுக்கொரு தலைவனைக் கொண்டாடுவார்கள். தமிழர்கள் ஒட்டுமொத்தமாகக் கொண்டாடுகிற ஒரே அடையாளம் தமிழ் மட்டுமே. அதனால் தான் தமிழகத்தில் தலைமையேற்க விரும்புகிற யாருமே தமிழைத் தூக்கிப் பிடிப்பார்கள். அவர்களும்கூட பொய்யாக தமிழைத் தூக்கிப் பிடிப்பதாக ஐயம் கொள்ள மாட்டார்கள் தமிழர்கள்; அப்படியே நம்புவார்கள். 

தந்தை பெரியார் பல கூட்டங்களில் பேசுவார்: தமிழன் விநாயகனைக் கொண்டாடுவான் விநாயகன் போல பிள்ளை பிறக்க வேண்டும் என்றெல்லாம் விரும்பமாட்டான். பாஞ்சாலியைக் கதைகளிலும், காட்சிகளிலும் கொண்டாடுவார்கள். ஆனால் வாழ்க்கையில் அனுமதிக்க மாட்டான் தமிழன் என்பார் பெரியார்.

அந்தக் கருத்தைத்தான் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரின் நேற்றைய அத்தியாயத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தையும், மீனா என்ற கதாபாத்திரத்தையும் வைத்து காட்சிப் படுத்தியிருக்கின்றார்கள்.

ஜீவாவும், மீனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மீனா வீட்டில் இவர்கள் காதலுக்கு இருந்த எதிர்ப்பு மீனா தாய்மை அடைந்ததும் மாறிப்போனது. மீனா வீட்டில் ஜீவாவிற்கு புல்லட் பைக் வாங்கித் தருகிறார்கள். ஜீவாவின் கடைசி தம்பி அந்த பைக்கை எடுத்துக் கொண்டு சென்று நண்பனுக்கு ஓட்டக் கொடுத்து வண்டியின் சிலபகுதிகளை உடைத்துக் கொண்டு வருகிறான். 

மீனா கோபம் அடைந்து, எங்க அப்பா உனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை எப்படி உன்தம்பி எடுத்துச் செல்லலாம் என்று சண்டை போடுகிறாள். எங்க வீட்டில் என்னுடையது, உன்னுடையது என்றெல்லாம் பார்க்கமாட்டோம் என்று ஜீவா தெரிவிக்க மீனா, ‘அப்ப நானும் பொதுவா பாஞ்சாலி மாதிரியா’ என்று கேட்டதும், குடும்பத்திற்குள் பாஞ்சாலி ஒப்பீடு என்கிற நிலையில் பாஞ்சாலி என்ற அந்த ஒற்றைச் சொல் தந்தை பெரியார் கூட்டங்களில் தெரிவித்து வந்ததுபோல ஜீவாவிற்கு கடுங் கோபத்தை ஏற்படுத்துகிறது. காதல்மனைவி என்றும் பாராமல், தாய்மை அடைந்தவள் என்கிற பரிவும் இல்லாமல் ஓங்கி அறைய முற்படுகிறான் நல்லவேளையாக, ஜீவாவின் தம்பி மனைவி முல்லை வந்து தடுத்து விடுகிறாள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.